/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நீதிபதி காலி பணியிடம் அதிகரிப்பு
/
நீதிபதி காலி பணியிடம் அதிகரிப்பு
ADDED : பிப் 19, 2024 12:17 AM
திருப்பூர்:திருப்பூரில் புதிய கோர்ட் அமைக்கப்பட்டுள்ள நிலையில், மற்றொரு கோர்ட் நீதிபதி அங்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனால், நீதிபதிகள் காலியிடங்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.
திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்தில் இதுவரை 19 கோர்ட்கள் இயங்கி வந்தன. தற்போது வாகன விபத்து இன்சூரன்ஸ் வழக்குளை விசாரிக்க மாவட்ட நீதிபதி அந்தஸ்திலான சிறப்பு கோர்ட் துவங்கப்பட்டுள்ளது. அவ்வகையில், லோக் அதாலத் நிரந்தர நீதிபதி, மாவட்ட சட்ட உதவி மையம் செயலாளர் ஆகிய மாவட்ட நீதிபதிகள் அந்தஸ்திலான பணியிடம் உட்பட இங்கு 20 நீதிபதிகள் பணியிடங்கள் உள்ளன. மாவட்டத்தின் பிற பகுதிகளில் கீழமை கோர்ட்கள் 20 என மொத்தம் தற்போது 40 நீதிபதிகள் பணியிடங்கள் உள்ளன.
புதிய கோர்ட்டுக்கு திருப்பூர் மகிளா கோர்ட் நீதிபதியாகப் பணியாற்றிய பாலு இடமாற்றம் செய்யப்பட்டு நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது, தாராபுரம் 3வது கூடுதல் மாவட்ட நீதிபதி ஜான் மினோ மகிளா கோர்ட்டுக்கு கூடுதல் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்தில் உள்ள நீதிபதி பணியிடங்களில், தற்போது 6 பணியிடங்கள், பிற பகுதியில், 4 கோர்ட் நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன.இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிபதி, லோக் அதாலத் நிரந்தர நீதிபதி; மாவட்ட சட்ட உதவி மைய செயலாளர் மற்றும் ஜே.எம்.எண் 3 நீதிபதி மற்றும் மகிளா கோர்ட் நீதிபதி ஆகிய பணியிடங்கள் காலியாக உள்ளன.
மேலும், பல்லடம் சார்பு நீதிபதி; மாவட்ட உரிமையியல் நீதிபதி; உடுமலை கூடுதல் மாவட்ட நீதிபதி மற்றும் ஜே.எம். எண் 1 ஆகிய நீதிபதி பணியிடங்கள் என திருப்பூர் மாவட்டத்தில் தற்போது 10 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன.

