/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கடத்தல் அதிகரிப்பு: போலீசார் கண்காணிப்பு
/
கடத்தல் அதிகரிப்பு: போலீசார் கண்காணிப்பு
ADDED : ஜன 28, 2026 07:10 AM

திருப்பூர்: ரயில்களில் கஞ்சா கடத்தி வருவது தொடர்ந்து அதிகரித்து வருவதால், தனிப்படையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இன்றைய சூழலில் குட்கா, கஞ்சா, போதை மாத்திரை புழக்கம் சமுதாயத்தில் அதிகமாக உள்ளது. குறிப்பாக, இளைஞர்கள் பலரும் போதைக்கு அடிமையாகி தங்களது வாழ்க்கையை தொலைத்து வருகின்றனர்.
சமுதாயத்தில் போதை பொருட்களின் புழக்கத்தை தடுக்க போலீஸ் தரப்பில் பல விதமான நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். போதை பழக்கத்துக்கு எதிராக பல்வேறு விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திருப்பூரை போன்ற தொழிலாளர் அதிகளவில் வசிக்கும் நகரத்தில் வெளி மாவட்ட, மாநிலத்தை சேர்ந்த ஏராளமான மக்கள் குடும்பத்துடன் தங்கி பனியன் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். வாலிபர்களை, தொழிலாளர்களை குறி வைத்து போதை கும்பல் புழக்கத்தில் விடுகின்றனர்.
600 கிலோ பறிமுதல் கடந்த ஒரு ஆண்டாக மாநகரில் கஞ்சா, குட்கா, போதை பொருட்கள் தொடர்பாக போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவின் பேரில், மூன்று தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இதனால், 600 கிலோ கஞ்சா, 230 கிலோ கஞ்சா சாக்லேட், சில கிராம் எடையுள்ள மெத்தபெட்டமைன், ஹெராயின் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக, 21 பேர் மீது குண்டாஸ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. குட்கா தொடர்பாக, 700 வழக்கு பதியப்பட்டு, 900 பேர் கைது செய்யப்பட்டு, 4,300 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. பழைய வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட, ஆயிரத்து, 100 கிலோ கஞ்சா அழிக்கப்பட்டது.
இந்நிலையில், தனிப்படையினர் பொது போக்குவரத்தான ரயில், பஸ் உள்ளிட்டவை கண்காணிக்கின்றனர். சமீப காலமாக கஞ்சா கடத்தலில் கைது செய்யப்படும் பெரும்பாலான நபர்கள், வடமாநிலத்தை சேர்ந்தவர்களாக உள்ளனர். இந்த ஒரு மாதத்தில் மட்டும், 50 முதல், 60 கிலோ வரை கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்து, ரயிலில் கடத்தி வந்தவர்களை போலீசார் கைது செய்தனர்.
தீவிர கண்காணிப்பு இதுகுறித்து போலீசார் கூறியதாவது:
மாநகரில் போதை பொருட்கள் புழக்கத்தை தடுக்கும் வகையில், மூன்று தனிப்படையினர் கண்காணிக்கின்றனர். ரயில், பஸ், பொது இடம், ஓட்டல் என, பல இடத்தில் திடீரென சோதனை செய்கிேறாம்.
அதில், சிக்குபவர்களில் பெரும்பாலும் வடமாநிலத்தினராக உள்ளனர். சொந்த ஊர்களுக்கு சென்று விட்டு திரும்பும் போது, தங்களுக்கு பயன் படுத்த அல்லது விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். கண்காணிப்பு பலமாக உள்ளதால், திருப்பூரில் தினமும் கஞ்சா கடத்தி பலர் சிக்குகின்றனர். ரயில்களில் எளிதாக கடத்தி வந்து விடுகின்றனர்.
சில நேரத்தில் போலீஸ் சோதனையின் போது, அவர்கள் சிக்காமல், பொட்டலங்களை மட்டும் பறிமுதல் செய்து விசாரிக்கும் சூழலும் ஏற்படுகிறது.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

