/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விற்பனை கூடத்திற்கு மக்காச்சோளம் வரத்து அதிகரிப்பு; இ-நாம் திட்டத்தில் ரூ. 25.53 லட்சம் மதிப்பில் விற்பனை
/
விற்பனை கூடத்திற்கு மக்காச்சோளம் வரத்து அதிகரிப்பு; இ-நாம் திட்டத்தில் ரூ. 25.53 லட்சம் மதிப்பில் விற்பனை
விற்பனை கூடத்திற்கு மக்காச்சோளம் வரத்து அதிகரிப்பு; இ-நாம் திட்டத்தில் ரூ. 25.53 லட்சம் மதிப்பில் விற்பனை
விற்பனை கூடத்திற்கு மக்காச்சோளம் வரத்து அதிகரிப்பு; இ-நாம் திட்டத்தில் ரூ. 25.53 லட்சம் மதிப்பில் விற்பனை
ADDED : ஜன 31, 2025 11:43 PM

உடுமலை; உடுமலை ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில், கடந்த ஒரு வாரத்தில் இ-நாம் திட்டத்தின் கீழ், ரூ. 25.53 லட்சம் மதிப்பிலான மக்காச்சோளம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
உடுமலை பகுதிகளில், கடந்த, செப் - அக்., மாதங்களில், ஏறத்தாழ, 60 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது, இப்பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட மக்காச்சோளம் அறுவடை தீவிரமடைந்துள்ளது.
கடந்தாண்டு வட கிழக்கு பருவ மழை திருப்தியாக பெய்ததால், படைப்புழு உள்ளிட்ட நோய் தாக்குதல் இல்லாமல், மக்காச்சோளம் வளர்ந்து, தற்போது மகசூல் அதிகரித்துள்ளது.
அறுவடை செய்யப்படும் மக்காச்சோளத்தை விவசாயிகள் நேரடியாகவும், ஒழுங்கு முறை விற்பனை கூடம் வாயிலாகவும் விற்பனை செய்து வருகின்றனர்.
உடுமலை ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில், 100 டன் வரை காயவைக்கும் உலர் களம் வசதி, ஈரப்பதம் பரிசோதனை மேற்கொள்ள நவீன ஆய்வக வசதியுடன், தேசிய வேளாண் சந்தையான இ-நாம் திட்டத்தின் கீழ், ஏலம் நடந்து வருகிறது.
இதனால், அதிகளவு விவசாயிகள் இங்கு மக்காச்சோளத்தை கொண்டு வந்து, காய வைத்து விற்பனை செய்து வருகின்றனர்.
கடந்த, 20ம் தேதி முதல், நேற்று வரை, 17 விவசாயிகள், 108.907 டன் மக்காச்சோளத்தை, இ-நாம் திட்டத்தின் கீழ், ரூ.25 லட்சத்து, 53 ஆயிரத்து, 388 மதிப்பில் விற்பனை செய்துள்ளனர்.
திருப்பூர் விற்பனை குழு முதுநிலை செயலாளர் தர்மராஜ் கூறியதாவது: உடுமலை பகுதிகளில், மக்காச்சோளம் அறுவடை தீவிரமடைந்துள்ள நிலையில், உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், காய வைக்கவும், இ-நாம் திட்டத்தின் கீழ் விற்பனை செய்யவும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கடந்த ஒரு வாரத்தில், 108 டன் மக்காச்சோளம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. குவிண்டால், ரூ. 2,300 முதல், 2,360 ரூபாய் வரை விற்பனையாகியுள்ளது. விவசாயிகள் ஒழுங்கு முறை விற்பனை கூடத்திலுள்ள வசதிகளை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
மேலும், கூடுதல் விபரங்களுக்கு, உடுமலை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் செந்தில்குமார், மொபைல் எண் 94439 62834 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, தெரிவித்தார்.