/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பச்சை மிளகாய்க்கு விலை அதிகரிப்பு
/
பச்சை மிளகாய்க்கு விலை அதிகரிப்பு
ADDED : நவ 01, 2024 10:14 PM
உடுமலை; உடுமலை சுற்றுவட்டாரத்தில் கிணற்று பாசனத்தை பயன்படுத்தி தக்காளி, வெங்காயம் உட்பட பல்வேறு காய்கறிகள் சாகுபடி செய்யப்படுகிறது.
இதில், பச்சை மிளகாய் சாகுபடி, பாப்பனுாத்து, குட்டியகவுண்டனுார், எலையமுத்துார், அந்தியூர் உட்பட பகுதிகளில், கணிசமாக சாகுபடி செய்யப்படுகிறது. களிமண் விளைநிலங்களிலும், செழித்து வளர்ந்து, பச்சை மிளகாய் நல்ல மகசூல் கிடைப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
ஆண்டுக்கு மூன்று பருவத்தில் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. நடவு செய்த, 75 நாட்களில் இருந்து அறுவடை செய்யப்படுகிறது. தொடர்ந்து மூன்று முதல் நான்கு மாதங்கள் வரை காய்கள் அறுவடை செய்யப்படுகிறது.
ஏக்கருக்கு குறைந்தபட்சம், 10 முதல், 12 டன் வரைக்கும் காய்கள் கிடைக்கிறது. தற்போது, பருவமழையால், காய்கறி சாகுபடியில், செடிகள் பாதித்து உற்பத்தி குறைந்துள்ளது.
பச்சை மிளகாய் வரத்தும், படிப்படியாக குறைந்து வருவதால், கொள்முதல் விலை அதிகரித்து வருகிறது. உடுமலை உழவர் சந்தையில், கிலோ, 35 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.