/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மூலப்பொருள் விலை அதிகரிப்பு எலாஸ்டிக் விலை 25 சதவீதம் உயர்வு
/
மூலப்பொருள் விலை அதிகரிப்பு எலாஸ்டிக் விலை 25 சதவீதம் உயர்வு
மூலப்பொருள் விலை அதிகரிப்பு எலாஸ்டிக் விலை 25 சதவீதம் உயர்வு
மூலப்பொருள் விலை அதிகரிப்பு எலாஸ்டிக் விலை 25 சதவீதம் உயர்வு
ADDED : மார் 17, 2026 05:50 AM

திருப்பூர்: மூலப்பொருட்கள் விலை உயர்ந்துள்ளதால், நாளை (18 ம் தேதி) முதல், 50 சதவீதம் உற்பத்தியை குறைப்பதுடன், எலாஸ்டிக் விலை, 25 சதவீதம் உயருமென, உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளனர்.
திருப்பூர் எலாஸ்டிக் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர் சங்க அவசர பொதுக்குழு கூட்டம், சங்க தலைவர் கோவிந்தசாமி தலைமையில் நடந்தது. சங்க செயலாளர் சவுந்தரராஜன், பொருளாளர் செல்வராஜ் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் - - ஈரான் போர் காரணமாக, ஏற்றுமதி - இறக்குமதி சரக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், மூலப்பொருட்கள் விலை அபரிமிதமாக உயர்ந்துள்ளது. எலாஸ்டிக் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் பாலியஸ்டர் நுால் விலை, 35 சதவீதம் உயர்ந்துள்ளது. ரப்பர் விலையும், 15 சதவீதம் உயர்ந்துள்ளது. இது, எலாஸ்டிக் உற்பத்தி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இத்தகைய விலை உயர்வு தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
எலாஸ்டிக் உற்பத்திக்கு மிக முக்கிய மூலப்பொருளான ரப்பர் மற்றும் பாலியஸ்டர் நுால் விலை உயர்வு நீடித்து வருவதால், எலாஸ்டிக் உற்பத்தி முடங்கும் அபாயம் உருவாகியுள்ளது. கலர் சாயம் விலை உயர்வால், 'நேம் எலாஸ்டிக்' எனப்படும், ஓவன் எலாஸ்டிக்கில் பயன்படுத்தப்படும் கலர் நுால் விலையும் அதிகரித்துள்ளது.
காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக ஓவன் 'எலாஸ்டிக்' பினிஷிங் செய்வதற்கான, 'ஹீட் செட்டிங்' பணியும் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. காஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால், தொழிலாளருக்கு உணவு தயாரிக்கும் பணியும் பாதிக்கப்பட்டுள்ளது குறித்து விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தில், எடுக்கப்பட்ட முடிவு குறித்து, சங்க தலைவர் கோவிந்தசாமி கூறுகையில், ''பாலிஸ்டர் நுால் விலை உயர்ந்து வருவதால், வரும் 18ம் தேதி (நாளை) முதல், 50 சதவீதம் அளவுக்கு எலாஸ்டிக் உற்பத்தியை குறைப்பது என்றும், 25ம் தேதி முதல் முழு உற்பத்தியையும் நிறுத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மூலப்பொருட்களின் விலை உயர்வை சமாளிக்கும் வகையில், எலாஸ்டிக் விலை, 25 சதவீதம் உயர்த்தப்படுகிறது. வரும், 18ம் தேதி (நாளை) முதல், 25 சதவீத விலை உயர்வு அமலுக்கு வரும்.
இத்தகைய விலை உயர்வு, லாப நோக்கத்திற்காக அல்ல; தொழிலை காக்கும் பொருட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பின்னலாடை உற்பத்தியாளர்கள் அதரவு அளிக்க வேண்டும்,'' என்றார்.

