/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பு; கண்காணிப்பில் அலட்சியம் காட்டும் அதிகாரிகள்
/
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பு; கண்காணிப்பில் அலட்சியம் காட்டும் அதிகாரிகள்
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பு; கண்காணிப்பில் அலட்சியம் காட்டும் அதிகாரிகள்
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பு; கண்காணிப்பில் அலட்சியம் காட்டும் அதிகாரிகள்
ADDED : ஏப் 29, 2025 09:21 PM

உடுமலை; உடுமலை நகராட்சி மற்றும் கிராம பகுதிகளில், அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்துள்ளது. சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் கண்காணிப்பில் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர்.
அபரிமிதமான பிளாஸ்டிக் பயன்பாட்டால், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. நிலத்தில் விழும் பிளாஸ்டிக் கழிவுகள், மண் மூலக்கூறுகைளை சிதைத்து மண்ணை மலடாக்குகிறது. பெய்யும் மழை நீர் நிலத்திற்குள் இறங்குவதை தடுத்து, நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கிறது.
மழை நீர் வடிகால், ஆறு, ஓடை, கால்வாய் என நீர் நிலைகளில் மலைபோல் குவிந்து, நீர் நிலைகள் பாதிக்கிறது. எரிக்கப்படுவதால், காற்று மாசு அதிகரிக்கிறது. நிலம், நீர், காற்று என சுற்றுச்சூழலுக்கு பிளாஸ்டிக் கழிவுகள் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
இதனால், கடந்த, 2019 முதல், பிளாஸ்டிக் உற்பத்தி, விற்பனை, பயன்பாட்டிற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.
பிளாஸ்டிக்கேரி பேக், ஓட்டல்களில் உணவுப்பொருள் பேக்கிங் பிளாஸ்டிக் ஷீட், பிளாஸ்டிக் டைனிங் டேபிள் விரிப்பு, பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் தட்டுக்கள், பிளாஸ்டிக் பூச்சு உள்ள பேப்பர் பிளேட் மற்றும் கப், பிளாஸ்டிக் டம்ளர், ஸ்ட்ரா, பிளாஸ்டிக் மற்றும் பிளாஸ்டிக் கோட்டிங் கொண்ட தண்ணீர் டம்ளர்கள், உணவு தட்டுக்கள், தண்ணீர் பாக்கெட், பிளாஸ்டிக் பூச்சு கொண்ட பேப்பர் பைகள், நான்-ஓவன் பேக் ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்பட்டது.
பொதுமக்கள், மஞ்சள் பை,எளிதில் மக்கும் பாக்கு மட்டை தட்டுக்கள், வாழை இலை, சில்வர் பாத்திரங்கள், கண்ணாடி டம்ளர்கள், பேப்பர் ஸ்ட்ரா, துணி, சணல், காகிதப்பை, பீங்கான் கப், தட்டுக்கள், மண் பானைகள், கரும்பு சக்கை, மூங்கில், தேங்காய் சிரட்டை ஆகியவற்றில் தயாரிக்கப்பட்ட பொருட்களை பயன்படுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டது.
விற்பனை தாராளம்
பிளாஸ்டிக் உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்பாடு இருந்தால், 10 ஆயிரம் ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். நிறுவனங்கள், கடைகள் பூட்டி சீல் வைக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது.
நகர பகுதிகள், ஊரக பகுதிகளில், அதிகாரிகள் கண்காணித்து, உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டது.
தடை செய்யப்பட்ட ஒரு சில மாதங்கள் மட்டுமே, அதிகாரிகள் கண்காணித்த நிலையில், உடுமலை நகராட்சி மற்றும் உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் ஒன்றிய பகுதி கிராமங்களில், மீண்டும் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்துள்ளது.
உடுமலை பகுதிகளில் 'நான் பிளாஸ்டிக் ' என்ற பெயரில் மோசடியாக நிறுவனம், பிளாஸ்டிக் கேரி பேக், முடிச்சு கவர்கள் உற்பத்தி செய்து விற்பனைக்கு அனுப்பி வருகிறது.
பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், உடுமலை பகுதிக்கு அதிகளவு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. கடைகளிலும், தடை, அபராதம் குறித்து கண்டு கொள்ளாமல், அதிகளவு விற்பனை செய்யப்படுவதால், பொதுமக்களிடமும் பயன்பாடு அதிகரித்துள்ளது.
பொது இடங்களில் வெளியேற்றப்படும் கழிவுகள், ஓடை, கால்வாய் மற்றும் நீர் நிலைகளில், அதிகளவு பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கி வருவதே, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்துள்ளதற்கு, சாட்சியாக உள்ளது.
அதிலும், கிராமப்பகுதிகளில் தடையின்றி விற்பனை அதிகரித்து காணப்படுகிறது. நகராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில், தடை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு இல்லாததோடு, அதிகாரிகள் கண்காணிப்பும் இல்லை.
டாஸ்மாக் மதுக்கடைகள் மற்றும் அதனை ஒட்டியுள்ள பார்கள், தனியார் மது விற்பனை நிலையங்களிலும், தடையின்றி வழக்கம் போல், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் டம்ளர்கள் பயன்படுத்தப்படுவதோடு, தினமும் பல டன் கழிவுகள் வெளியேற்றப்படுகிறது.
எனவே, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து, பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.