/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மக்களிடம் வாங்கும் சக்தி அதிகரிக்கும்
/
மக்களிடம் வாங்கும் சக்தி அதிகரிக்கும்
ADDED : பிப் 08, 2025 11:42 PM

திருப்பூர் : மத்திய பட்ஜெட்டில் 12 லட்சம் ரூபாய் வரை வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதைப் பல்வேறு துறையினரும் வரவேற்றுள்ளனர்.
திருப்பூரில் ஆடிட்டர்கள் பங்கேற்ற கருத்தரங்கில், ''மத்திய பட்ஜெட், மக்களிடம் வாங்கும் சக்தியை அதிகரிக்கும்' என்று கருத்து தெரிவிக்கப்பட்டது.
இந்திய பட்டய கணக்காளர் நிறுவன திருப்பூர் கிளையில், மத்திய பட்ஜெட் குறித்த விளக்க கருத்தரங்கு நடந்தது. கிளை தலைவர் செந்தில் தலைமை வகித்தார்.
பட்டய கணக்காளர்கள் பங்கேற்று, பட்ஜெட் மாற்றங்கள் குறித்தும், அவற்றை பின்பற்றும் வழிமுறைகள் குறித்த சந்தேகங்களை கேட்டறிந்தனர்; உரிய உதாரணங்களுடன் விளக்கம் அளிக்கப்பட்டது.
வரவேற்பு
நேர்முக வரிகள் குறித்து, முன்னாள் மத்திய குழு உறுப்பினர் ஆடிட்டர் சேகர்: பட்ஜெட்டில், 12 லட்சம் ரூபாய் வரை, தனிநபர் வருமானத்துக்கு வரிக் கழிவு அளித்துள்ளது வரவேற்கத்தக்கது. வரி விகிதத்தில் செய்யப்பட்டுள்ள மாற்றத்தால், தனிநபர் வருமான வரியில் சேமிப்பு ஏற்படும். மக்களிடையே வாங்கும் சக்தியும் அதிகரிக்கும். நீண்டகால மூலதன ஆதாயம் மீதான வரி போன்ற சிறப்பு வரிவிகிதங்களுக்கு, சட்டப்பிரிவு 87 - 'ஏ' ன் கீழ் கழிவு பொருந்தாது.
நுணுக்கம்
மறைமுக வரியின மாற்றங்கள் குறித்து ஆடிட்டர் சரவணக்குமார்: ஆலை மற்றும் இயந்திரங்கள் மீதான உள்ளீட்டு வரி மீதான மாற்றத்தால், வாடகைக்கு விட்டுள்ள கட்டடங்களுக்கு உள்ளீட்டு வரி எடுக்க இயலாது. கடந்த, 2017 ஜூலை 1ம் தேதிக்கு முன்தேதியிட்டு, இந்த மாற்றம் அமலுக்கு வரும். விற்பனை மீதான 'கிரெடிட் நோட்' போடும் போது, விற்பனை செய்தவர், வரிக்கழிவு பெற வேண்டும் என்றால், சரக்கு அல்லது சேவை பெற்றவர், அந்த பொருள் அல்லது சேவையின்மீது பெற்ற உள்ளீட்டு வரியை திருப்ப அளித்திருக்க வேண்டும். பட்ஜெட்டில், சில நுணுக்கமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
கருத்தரங்கு ஏற்பாடுகளை, ஆடிட்டர்கள் முருகேசன் மற்றும் மகேஷ் செய்திருந்தனர். திருப்பூர் கிளை செயலாளர் தருண் நன்றி கூறினார்.