/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அதிகரிக்கும் புற்றுநோய்; காரணம் என்ன?
/
அதிகரிக்கும் புற்றுநோய்; காரணம் என்ன?
ADDED : ஜன 15, 2024 12:46 AM
திருப்பூர்;திருப்பூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், மாவட்ட நிர்வாகம் மற்றும் திருப்பூர் மாநகராட்சி சார்பில், நமக்கு நாமே திட்டத்தில், 90 கோடி ரூபாய் செலவில் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டிருக்கிறது. இதில், 30 கோடி ரூபாய் மக்களின் பங்களிப்பு.
நிதி திரட்டுவதில் வேகம் காட்டி வருகின்றனர் திருப்பூர் ரோட்டரி நல அறக்கட்டளையினர்.அதே நேரம், மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், புற்றுநோய் சிகிச்சை துவங்கப்பட்டும் இருக்கிறது. இப்போது தான், புற்றுநோயின் தீவிரம் என்ன என்பதை மக்கள் உணர துவங்கியிருக்கின்றனர்.
திருப்பூர் ரோட்டரி நல அறக்கட்டளை தலைவர் டாக்டர் முருகநாதன், நம்மிடம் பகிர்ந்தவை...
''28 வயதான இளைஞன்; திருமணமாகியிருக்கிறது; பெற்றோர் உள்ளனர்; புற்று நோயால் தாக்கப்பட்ட அந்த இளைஞன் இறந்து போகிறான். உடைந்து நொறுங்குகின்றனர் அவனது குடும்பத்தில் உள்ளவர்கள். விழிகளில் இருந்து கொட்டிய கண்ணீர்த்துளிகளின் வடு, மறையவில்லை... அந்த குடும்பத்தினர் என்னை அழைத்து, 10 லட்சம் ரூபாயை புற்று சிகிச்சை மையத்துக்கு நன்கொடையாக வழங்கினர்.
அதே போன்று, ஒரு பெண், தன் சகோதரிக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்கிறார்; அவருக்கு புற்றுநோய் உறுதி செய்யப்படுகிறது. எதேச்சையாக தானும் மருத்துவ பரிசோதனை செய்கிறார். அவருக்கும் புற்றுநோய் உறுதியாகிறது. அவர், பெரும் அதிர்ச்சியடைகிறார்.
தாமதம் கூடாது
இப்படியாக தான், புற்றுநோயின் பரவல் இருக்கிறது. திருப்பூரை பொறுத்தவரை இடம் பெயர்ந்து வரும் தொழிலாளர்கள் அதிகம். புகையிலை, பாக்கு போன்றவற்றை பயன்படுத்துவது, புற்றுநோய்க்கு வழி வகுக்கிறது. சிகரெட் பிடிக்கும் பழக்கமும் புற்றுநோய்க்கு வழி வகுக்கிறது.
பெண்களுக்கு மார்பக மற்றும் கர்ப்ப பை வாய் புற்றுநோய் அதிகளவில் ஏற்படுகிறது. எனவே, பெண்கள், தொடர்ச்சியான இடைவெளியில் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். ஏதேனும் கட்டி போன்றோ, உடலில் மாறுபட்ட அறிகுறி தென்பட்டால், தாமதமின்றி மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
ஆனால், பெரும்பாலானோர், நோய் முற்றிய நிலையில் சிகிச்சைக்கு வருவதால், அவர்களை குணப்படுத்துவது சிரமமான காரியமாகிவிடுகிறது.திருப்பூரில் உள்ள மக்கள் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற கோவை, சென்னை உள்ளிட்ட இடங்களுக்கே செல்கின்றனர்.
திருப்பூரில் சிகிச்சை மையம் அமைந்துவிட்டால், இங்கேயே தரமான, உயிர் காக்கும் சிகிச்சையை பெற முடியும். ஈரோடு, நீலகிரி மாவட்ட மக்களும் பயன் பெற முடியும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
உதவும் குணம் வளர்த்த'தினமலர்' செய்தி!
புற்றுநோய் சிகிச்சை மையத்துக்கு, மக்களின் பங்களிப்பு தொகையை வழங்க, பொதுமக்கள், தன்னார்வ அமைப்பினர், தொழில் துறையினர் முன்வர வேண்டும் என்ற கோரிக்கையை, ரோட்டரி நல அறக்கட்டளையினர் தொடர்ந்து முன்னிறுத்தி வருகின்றனர். இதுதொடர்பாக, சம்மந்தப்பட்ட நிர்வாகிகளின் மொபைல் எண்ணுடன் கூடிய செய்தி, 'தினமலர்' நாளிதழில் வெளியானது. இந்த செய்தியை பார்த்து, டையிங் தொழிலாளி ஒருவர், 500 ரூபாய் நன்கொடையை தன் பங்களிப்பாக வழங்கி, ரோட்டரி அறக்கட்டளையினரின் பாராட்டை பெற்றார்.