ADDED : ஜன 05, 2024 01:14 AM

திருப்பூர்:திருப்பூர் மாநகராட்சி பகுதியில், தெரு நாய்களின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வீடுகளில் குடியிருப்போர் வீட்டில் மீதமான உணவு பொருட்களை போடும் இடங்களிலும், ஓட்டல்கள், இறைச்சி கடைகளிலிருந்து வீசப்படும் மீத உணவுகள், இறைச்சி கழிவுகள் போன்றவற்றை உண்டு இவை தெருக்களில் சுற்றித் திரிகின்றன.
இதுதவிர, குப்பை தொட்டிகள் அமைந்துள்ள இடங்கள், குப்பைகள் வீசப்படும் இடங்களிலும் இவை உணவு தேடி கூட்டம், கூட்டமாக வருகின்றன. சில நேரங்களில் சுற்றித்திரியும் தெரு நாய்கள், ஒன்றோடொன்று சண்டையிட்டுக் கொள்கின்றன.
அப்போது, ரோட்டில் நடந்து செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்ல வேண்டியுள்ளது. ரோட்டில் குறுக்கு நெடுக்காக ஓடும் நாய்களால் விபத்துகள் ஏற்படுவதும் சகஜமாகி வருகிறது. சில நேரங்களில் தெருக்களில் செல்வோரை துரத்திச் சென்று இந்த நாய்கள் கடித்து குதறுகின்றன.
குறிப்பாக, 58வது வார்டு, வசந்தம் நகர் பகுதியில் கடந்த சிலநாட்களாக தெருநாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. பள்ளி செல்லும் மாணவர்கள், தெருவில் விளையாடும் சிறுவர்களை இவை துரத்துவதால் அச்சத்துடன் கடந்து செல்ல வேண்டியுள்ளது.