திருப்பூர்; எச்.டி., செட்டாப் பாக்ஸ்களின் வருகையால், அரசு கேபிள் இணைப்புக்கு திருப்பூர் மாவட்ட மக்கள் மத்தியில் மவுசு அதிகரித்துள்ளது.
தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனம், தமிழ், விளையாட்டு, குழந்தைகள் சேனல், உள்ளூர் சேனல் என, 300க்கும் மேற்பட்ட சேனல்களை, மிக குறைந்த மாத கட்டணத்தில் வழங்கிவருகிறது. ஆனாலும், அரசு கேபிள் இணைப்பில், எச்.டி., செட்டாப் பாக்ஸ்கள் இல்லாததால், பலரும் தனியார் கேபிள் இணைப்பையே பெற்று பயன்படுத்தி வருகின்றனர்.
பொதுமக்கள் மற்றும் ஆபரேட்டர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில், அரசு கேபிள் டிவி நிறுவனமும், எச்.டி., செட்டாப் பாக்ஸ்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில், 650 அரசு கேபிள் 'டிவி' ஆபரேட்டர்கள் உள்ளனர்; மொத்தம், 45 ஆயிரம் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. முதல்கட்டமாக, திருப்பூருக்கு 6 ஆயிரம் எச்.டி., பாக்ஸ்கள் வந்து சேர்ந்தன. கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கும் அரசு கேபிள் டிவி நிறுவன அலுவலகத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. அரசு கேபிள் ஆபரேட்டர்கள், ஆன்லைனில் பதிவு செய்து, எச்.டி., பாக்ஸ்களை பெற்றுவருகின்றனர்.
அரசு கேபிள் டிஜிட்டல் சிக்னல் வினியோகஸ்தர்கள் கூறியதாவது:
எச்.டி., செட்டாப் பாக்ஸ்கள் வருகையால், தமிழகம் முழுவதும் அரசு கேபிள் டிவி இணைப்புகள் எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
மிக குறைந்த கட்டணத்தில் கூடுதல் சேனல்களை, துல்லிய காட்சிகளுடன் கண்டுகளிக்க முடியும் என்பதாலும், எச்.டி.எம்.ஐ., கேபிள் உதவியுடன் அனைத்து புது மாடல் டிவிகளிலும் இணைக்கமுடியும் என்பதாலும், திருப்பூர் மாவட்ட மக்கள், அரசு கேபிளில் புதிய இணைப்பு பெறுவதற்கு மிகுந்த ஆர்வம்காட்டத்துவங்கியுள்ளனர்.
மாவட்டத்தில் இதுவரை அரசு கேபிள் ஆபரேட்டர்களால், மூவாயிரம் எச்.டி., செட்டாப் பாக்ஸ்கள் பெறப்பட்டு, இணைப்புகளுக்கு பொருத்தப்பட்டுவருகிறது. அரசு கேபிள் டிவியை பயன்படுத்தினால் மாதம், 100 முதல் 150 ரூபாய் வரை சேமிக்க முடியும்.
புதிய இணைப்புகளுக்கு, அருகில் உள்ள அரசு கேபிள் டிவி ஆபரேட்டரை அணுகலாம். இணைப்பு தர மறுத்தால், 18004252911 என்கிற இலவச எண்ணில் அழைத்து புகார் தெரிவிக்கலாம், என்றனர்.