/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அங்கன்வாடிகளில் அதிகரிக்கும் பணிச்சுமை; காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்
/
அங்கன்வாடிகளில் அதிகரிக்கும் பணிச்சுமை; காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்
அங்கன்வாடிகளில் அதிகரிக்கும் பணிச்சுமை; காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்
அங்கன்வாடிகளில் அதிகரிக்கும் பணிச்சுமை; காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்
ADDED : மே 05, 2025 10:31 PM
உடுமலை; உடுமலை சுற்றுப்பகுதியில், காலியாக இருக்கும் அங்கன்வாடி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என, அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
உடுமலை சுற்றுப்பகுதியில், 138 அங்கன்வாடி மையங்கள் உள்ளன. அங்கன்வாடி மையங்களில், இரண்டு முதல் ஐந்து வயது வரை உள்ள குழந்தைகள் பராமரிக்கப்படுகின்றனர். அவர்களுக்கான சிற்றுண்டி, மதிய உணவு மையத்தில் வழங்கப்படுகிறது.
மேலும், அவர்களுக்கான விளையாட்டுகளை கற்றுத்தருவது, பள்ளிக்கல்விக்கு அடிப்படையான செயல்பாடுகள், பாட்டுகளை மையத்தினர் கற்றுதர வேண்டும். இப்பணிகளுக்கு, ஒவ்வொரு மையத்திலும், ஒரு பணியாளர் மற்றும் ஒரு உதவியாளர் நியமிக்கப்படுகின்றனர்.
உடுமலை சுற்றுப்பகுதியில், பெரும்பான்மையான மையங்களில் பணியாளர், உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. உடுமலையில், 26 பணியாளர் மற்றும் உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
இதனால் அங்கன்வாடி மையத்தில், பணிகள் அதிகம் பாதிக்கப்படுகிறது. ஒரு பணியாளர், இரண்டு மையங்களை பார்க்க வேண்டிய பணிச்சுமைக்கும் தள்ளப்படுகின்றனர்.
மேலும், சில மையங்களில் குழந்தைகளை பராமரிப்பதற்கும், அவர்களுக்கு உணவு தயாரிப்பதற்கும், ஒருவர் மட்டுமே இருக்கும் சூழல் ஏற்படுகிறது. அதேபோல் பணிநிறைவு பெறும் பணியாளர்கள் இடமும் நிரப்பப்படுவதில்லை.
காலிப்பணியிடங்களால், மற்ற பணியாளர்களுக்கு பணிச்சுமை கூடுகிறது. மேலும், குழந்தைகளை முழுமையாக பராமரிப்பதற்கும், அவர்களை முழு நேரம் கண்காணிப்பதற்கும் முடியாத நிலை ஏற்படுகிறது.
மையங்களில் ஒரு பணியாளர் மட்டுமே இருப்பதால், பல பெற்றோரும் குழந்தைகளை அனுப்ப தயங்குகின்றனர். கடந்த ஓராண்டாக, உடுமலை வட்டாரத்துக்குட்பட்ட குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் பணியிடமும் காலியாகவே உள்ளது.
உடுமலை மட்டுமின்றி, குடிமங்கலம் உட்பட திருப்பூர் மாவட்டத்தில் அங்கன்வாடி பணியாளர்கள் காலிப்பணியிடங்கள் தொடர்ந்து அதிகரித்த நிலையிலும், நிரப்பப்படாமல் உள்ளது.
காலிப்பணியிடங்களை நிரப்பினால் மட்டுமே, அங்கன்வாடி செயல்பாடுகளை முழுமையாக மேற்கொள்ள முடியும் என, பணியாளர்கள் அரசுக்கு வலியுறுத்தியுள்ளனர்.