/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தனி மனித அமைதியே அனைத்துக்கும் தீர்வு! குருமகான் பரஞ்ஜோதியார் பேச்சு
/
தனி மனித அமைதியே அனைத்துக்கும் தீர்வு! குருமகான் பரஞ்ஜோதியார் பேச்சு
தனி மனித அமைதியே அனைத்துக்கும் தீர்வு! குருமகான் பரஞ்ஜோதியார் பேச்சு
தனி மனித அமைதியே அனைத்துக்கும் தீர்வு! குருமகான் பரஞ்ஜோதியார் பேச்சு
ADDED : ஜன 08, 2024 01:11 AM

உடுமலை;''தங்களுக்குள் அமைதியை கண்டறிந்து, அந்த அமைதியை பிறருக்கு பரப்பிய மகான்களின் வழியை அனைவரும் பின்பற்ற வேண்டும்,'' என பிரபஞ்ச நல மகாதவ வேள்வி நிறைவு விழாவில், குருமகான் பரஞ்ஜோதியார் பேசினார்.
உடுமலை திருமூர்த்திமலை உலக சமாதான ஆலயத்தில், 34வது பிரபஞ்ச நல மகாதவ வேள்வி நிறைவு விழா நேற்று நடந்தது.
உலக சமாதான அறக்கட்டளை பொதுச்செயலாளர் சுந்தரராமன் வரவேற்றார். கன்னியாகுமரி அன்பு வனம் பீடாதிபதி பாலபிரஜாபதி அடிகளார் தலைமை வகித்து பேசினார்.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி நக்கீரன் பேசுகையில், ''உலக போர்களுக்குப்பிறகு, சர்வதேச அளவில், சமாதானம் குறித்த விரிவான பார்வை தேவைப்பட்டது. இதற்காக ஐ.நா., சபை உருவாக்கப்பட்டு நாடுகளுக்கு இடையே சமாதான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.'' பிறருடன் சண்டையிட்டால், அமைதி குலையும். எனவே, தனிநபர் அமைதியை ஏற்படுத்த பல்வேறு வழிகள் பின்பற்றப்படுகிறது. அவற்றை பின்பற்றி, தனிநபர் வாயிலாக அமைதி வழியை ஏற்படுத்துவது அவசியமாகியுள்ளது,'' என்றார்.
தொடர்ந்து குருமகான் பரஞ்ஜோதியார் பேசியதாவது: உலகத்தை இயக்கி வருவது இயற்கையே ஆகும். அனைவருக்கும் இந்த பிரபஞ்சத்துடன் தொடர்பு உள்ளது.
எனவே தான் மண்ணில் தோன்றிய அனைத்து மகான்களும், தங்களுக்குள் அமைதியை கண்டறிந்து, அந்த அமைதியை பிறருக்கு பரப்பி, பிரபஞ்சம் அமைதியாக வாழ விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அந்த மகான்களை நம் பின்பற்ற வேண்டும்.
தனி மனித அமைதி ஏற்படும் போது, இயற்கை மீதும், சக மனிதர்கள் மீதான பார்வையும் மாறுபடும். மூலப்பொருளாய் ஆதியாய், அந்தமாய், அனைத்திலும் நிறைந்துள்ள நமக்கு மீறிய சக்தியை கண்டறிய வழிகாட்டும்.
பல்வேறு இயற்கை சீற்றங்களை, போர்களை இந்த பூமி தொடர்ந்து சந்தித்து வருகிறது. அவற்றில் பாடம் கற்கும் மனிதர்கள், அமைதியை விரும்பி, இயற்கையை நேசித்து, அதை அழிக்கும் முயற்சிகளை கைவிட வேண்டும்.
இதனால், இந்த பிரபஞ்சத்தில், நாம் தோன்றியதற்கான அர்த்தம் தெரிய வரும். எனவே, இயற்கையை நேசிப்போம்; சுய ஒழுக்கமே அனைத்துக்கும் ஆதாரமாக உள்ளது. அந்த ஒழுக்கம் பின்பற்றப்பட்டால், பூமியில் என்றும் அமைதி நிலவும்.
இவ்வாறு, அவர் பேசினார். நிகழ்ச்சியில் பொள்ளாச்சி எம்.பி., சண்முகசுந்தரம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.