/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மயில்ரங்கம் கோவிலில் திருப்பணி துவக்கம்
/
மயில்ரங்கம் கோவிலில் திருப்பணி துவக்கம்
ADDED : பிப் 23, 2024 12:42 AM

திருப்பூர்;வெள்ளகோவிலில் உள்ள தையல்நாயகி உடனமர் வைத்தீஸ்வரர் கோவில் திருப்பணி நேற்று முன்தினம் துவங்கியது.
முருகப்பெருமான் நரகாசுரனை வதம் செய்து விட்டு, திரும்பும் போது இத்திருத்தலத்தில் இறங்கி சிவனை பூஜித்து வணங்கி சென்றதால் மயில்ரங்கம் (மயில் இறங்கம்) என்ற திருப்பெயர் பெற்ற வரலாற்று சிறப்புடைய ஊராகும்.
புராண கால சிறப்புகளை கொண்டது மயில்ரங்கம் வைத்தீஸ்வரன் கோவில். கிருஷ்ணதேவராய மன்னரால் ஒரு பகுதி கட்டப்பட்டு, பின் மற்றொரு பகுதி பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட கோவிலாகும். கொங்கு மண்டலத்திலேயே சப்தஸ்வர துாண்கள் எனப்படும் இசை துாண்கள் உள்ள கோவிலாகும்.
கோவிலில் உள்ள பெரும்பாலான சுவாமி திருமேனிகளுக்கு ஐம்பொன்னால் ஆனா உற்சவர் அரசின் பாதுகாப்பில் உள்ளது. இரண்டு சுரங்க அறை, 600 ஏக்கருக்கு மேல் சொத்துகள் என, எண்ணற்ற சிறப்புகளை கொண்டது இக்கோவில்.
இச்சூழலில், கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிட்டு, இதற்காக திருப்பணி மேற்கொள்ள நேற்று முன்தினம் பூஜைகள் துவங்கியது. இதில், சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்றனர்.
பக்தர்கள் சிலர் கூறுகையில், 'கடந்த, 1985ம் ஆண்டுக்கு பின், 2024ம் ஆண்டு வரை என, முறையாக கும்பாபிஷேகம் நடத்தி இருந்தால், மூன்று முறை நடந்து இருக்க வேண்டும். இருப்பினும், தற்போது கும்பாபிஷேகத்துக்கான திருப்பணிகள் துவங்கியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது,' என்றனர்.