ADDED : டிச 21, 2024 11:28 PM

சிங்கப்பூரில் நடந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரரான குகேஷ் பங்கேற்று உலக சாம்பியன் பட்டம் பெற்றார். நம் நாட்டில் செஸ் போட்டி மீதான ஆர்வம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக குகேஷ், பிரக்ஞானந்தா உள்பட செஸ் கிராண்ட்மாஸ்டர்கள் தமிழகத்தில் இருந்து பலர் உருவாகிவருகின்றனர்.
திருப்பூரைச் சேர்ந்த செஸ் வீரர், வீராங்கனைகளுக்கு கிராண்ட் மாஸ்டர் ஆக வேண்டும் என்ற கனவை, குகேஷ் உள்ளிட்டோர் விதைத்துள்ளனர்.
திருப்பூர் மாவட்ட செஸ் அசோசியேஷன் நிர்வாகிகள் கூறுகையில், ''செஸ் போட்டிக்கு போதுமான பயிற்சியாளர் திருப்பூர் மாவட்டத்தில் உள்ளனர். கற்றுக்கொள்ள ஆர்வமாக உள்ளவர்களுக்கு இலவச பயிற்சி வழங்க மாவட்ட செஸ் அசோசியேஷன் ஏற்பாடு செய்துள்ளது.
செஸ் போட்டி மீதான ஆர்வம் அதிகரித்து, ஒரு போட்டி கூட விடாது பங்கேற்று வருபவர்கள் எளிதில், ரேங்கிங் பட்டியலில் இடம் பெற்று விடுகின்றனர். வரும், 2025, ஜன., 2 முதல், 9ம் தேதி வரை 15வது சென்னை ஓபன் இன்டர்நேஷனல் கிராண்ட்மாஸ்டர் போட்டி நடக்கவுள்ளது. ரேங்கிங் பட்டியலில், 1,800 முதல், 2,000 இடங்களுக்குள், அதற்கு முன்பான இடங்களை பெற்றவர்கள் இப்போட்டியில் பங்கேற்கலாம். இத்தகைய போட்டிக்கு செல்ல திருப்பூர் மாவட்ட செஸ் அசோசியேஷனில் உள்ள மாணவ, மாணவியரை தயார்படுத்தி வருகிறோம்'' என்றனர்.