/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
படைப்புழு தாக்குதல்: விவசாயிகள் கவலை
/
படைப்புழு தாக்குதல்: விவசாயிகள் கவலை
ADDED : அக் 27, 2025 10:00 PM
உடுமலை: மானாவாரி மக்காச்சோள சாகுபடியில், படைப்புழு தாக்குதல் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில், உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதிகளில் விவசாயம் பிரதானமாக உள்ளது. இதில், உடுமலை குடிமங்கலம் வட்டாரங்களில், வடகிழக்கு பருவமழையை ஆதாரமாகக்கொண்டு மானாவாரியாக, மக்காச்சோளம் அதிக அளவு சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
கடந்த சீசனில் கிடைத்த நிலையான விலை காரணமாக, மானாவாரி சாகுபடிக்கும் மக்காச்சோளத்தையே விவசாயிகள் தேர்வு செய்துள்ளனர். நடவு முடிந்து இரு வாரங்களாகி செடிகள் வளர்ந்த தருணத்தில் உள்ளது.
இந்நிலையில், பயிர்களில் படைப்புழு தாக்குதல் அதிகரித்துள்ளது. இப்புழுக்கள் பயிரின் குருத்துகளை சேதப்படுத்துகிறது; பச்சையத்தையும் சுரண்டி விடுகிறது. இதனால் பயிரின் வளர்ச்சி பாதித்து வருகிறது.
இதனால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். இப்பிரச்னைக்கு வேளாண்துறை உரிய வழிகாட்டுதல்கள் வழங்க வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து, விவசாயிகள் கூறியதாவது: மக்காச்சோளத்துக்கு நிலையான விலை கிடைக்கிறது. எனவே மானாவாரியாகவும் மக்காச்சோளம் நடவு செய்துள்ளோம். பயிரின் வளர்ச்சி தருணத்தில் படைப்புழு தாக்குதல் துவங்கியுள்ளது.
வேளாண்துறை பரிந்துரை எதுவும் வழங்காததால், தனியார் விற்பனை நிலையங்களில் மருந்து வாங்கி தெளித்து வருகிறோம். இருப்பினும் தாக்குதல் குறையவில்லை.
ஆண்டுக்கு ஒரு முறை மேற்கொள்ளும் மானாவாரி சாகுபடியில் நஷ்டத்தை தவிர்க்க வேளாண் துறை உதவ வேண்டும்.
இவ்வாறு தெரிவித்தனர்.
வேளாண்துறை மட்டுமல்லாது, தமிழக அரசும் இப்பிரச்னையில் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்காச்சோளம் விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

