ADDED : பிப் 04, 2024 02:03 AM
திருப்பூர்;திருப்பூர் மாநகராட்சி பகுதியில், 'அம்ரூத்' திட்டத்தில், நான்காவது குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், தாராபுரம் ரோடு, நொய்யல் வீதி ஆகிய பகுதிகளில், மேல்நிலைத் தொட்டி கட்டுமானம் நிறைவடைந்துள்ளது.
இவற்றில குழாய்கள் பொருத்தி, குடிநீர் நிரப்பி சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது. அவ்வகையில், அதற்கான பணியை துவங்கும் விதமாக நேற்று மேயர் தினேஷ்குமார், கமிஷனர் பவன்குமார் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். விரைவில் பணிகளை முடித்து சோதனையோட்டம் நடத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
டவுன்ஹால் அரங்கு
'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், குமரன் ரோட்டில் மாநாட்டு அரங்கு கட்டுமானப் பணி நிறைவடைந்துள்ளது. தற்போது இறுதிக் கட்ட பணிகள் நடந்து வருகின்றன.
இதனை நேற்று மேயர் மற்றும் கமிஷனர் ஆய்வு செய்தனர். இதில், மாநகர பொறியாளர் லட்சுமணன், செயற்பொறியாளர் கண்ணன், இளம் பொறியாளர் கோவிந்த பிரபாகர் ஆகியோர் விளக்கினர்.