/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விபத்து காலங்களில் கைகொடுக்கும் காப்பீடு
/
விபத்து காலங்களில் கைகொடுக்கும் காப்பீடு
ADDED : மார் 22, 2025 06:55 AM

திருப்பூர்: 'அனைத்து நிறுவனங்களும் காப்பீடு செய்து கொள்ள வேண்டும். காப்பீடு செய்வதன் வாயிலாக விபத்து காலங்களில் இழப்பு ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ளலாம்' என, கருத்தரங்கில் அறிவுறுத்தப்பட்டது.
யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் சார்பில், காப்பீடு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க அரங்கில் நேற்று நடைபெற்றது. சங்க பொதுச்செயலாளர் திருக்குமரன் தலைமை வகித்தார். இணைச்செயலாளர் குமார் துரைசாமி, பொருளாளர் கோபாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர்.
கருத்தரங்கில், யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவன முதன்மை மண்டல மேலாளர் சந்தீப் பேசியதாவது:
திருப்பூரில் பின்னலாடை உற்பத்தி தொழில் வளர்ச்சி அடைந்து வருகிறது. தினமும் பல கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் ஆயத்த ஆடை வர்த்தகம் நடைபெற்று வருகிறது. தீ விபத்து, எடுத்து செல்லப்படும் பொருட்கள் சேதமடைவது போன்ற எதிர்பாராத விபத்துக்கள், நிறுவனங்களுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்திவிடுகிறது. இதுபோன்ற சூழல்களில், சம்பந்தப்பட்ட நிறுவன உரிமையாளர்கள் கடும் நெருக்கடிகளை எதிர்கொள்ளநேரிடுகிறது. காப்பீடு என்பது, ஆபத்து காலங்களில் நிறுவனங்களுக்கு கைகொடுத்து பாதுகாப்பு அளிக்கிறது.
காப்பீடு மூலமாக, நிறுவனங்கள் நுாறு சதவீத நஷ்டத்தை தவிர்க்க முடியும். எதிர்பாராத சம்பவங்கள் நடந்தபின்னர், அதனால் ஏற்படும் நஷ்டங்களை தடுக்க இயலாது. ஆனால், காப்பீடு செய்வதன் மூலம், நஷ்டத்திலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். சிறு நிறுவனங்கள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை அனைத்துவகையான நிறுவனங்களும் அவசியம் காப்பீடு செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், தீ விபத்தில் பாதிக்கப்பட்ட திருப்பூரை சேர்ந்த ஒரு நிறுவனத்துக்கு, ரூ.6.50 கோடி ரூபாய் இழப்பீடு தொகை வழங்கப்பட்டது. திருப்பூர் பின்னலாடை உற்பத்தி துறையினர் பங்கேற்று, காப்பீடு தொடர்பான சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்றனர்.