/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குப்பை அகற்றம், குழாய் பதிப்பு பணிகளில் முறைகேடு; மாநகராட்சி கவுன்சிலர்கள் பகிரங்கம்
/
குப்பை அகற்றம், குழாய் பதிப்பு பணிகளில் முறைகேடு; மாநகராட்சி கவுன்சிலர்கள் பகிரங்கம்
குப்பை அகற்றம், குழாய் பதிப்பு பணிகளில் முறைகேடு; மாநகராட்சி கவுன்சிலர்கள் பகிரங்கம்
குப்பை அகற்றம், குழாய் பதிப்பு பணிகளில் முறைகேடு; மாநகராட்சி கவுன்சிலர்கள் பகிரங்கம்
ADDED : பிப் 01, 2025 12:30 AM

திருப்பூர்; ''குப்பை அகற்றுதல், குழாய் பதிப்பு பணிகளில் ஒப்பந்தாரர்கள் முறைகேடு செய்கின்றனர். இதற்கு அலுவலர்களும் துணை போகின்றனர்'' என, மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் சரமாரியாக குற்றம் சுமத்தி பேசினர்.
திருப்பூர் மாநகராட்சி கூட்டம் நேற்று மேயர் தினேஷ்குமார் தலைமையில் நடந்தது. துணை மேயர் பாலசுப்ரமணியம், கமிஷனர் ராமமூர்த்தி முன்னிலை வகித்தனர்.
ஏலம் கூடாது
கவுன்சிலர்கள் விவாதம் வருமாறு:
* ரவிச்சந்திரன் (இ.கம்யூ.,):சொத்து வரி உயர்வு குறித்து அரசு தரப்பிலிருந்து உரிய பதில் வரும் வரை வரி உயர்வு, கட்டட மறு சீராய்வு ஆகியன நிறுத்தி வைக்க வேண்டும். இதில் அரசியல் செய்வதாக மேயர் கூறுவது தவறு. டவுன்ஹால் வளாகம் தனியாருக்கு ஏலம் விடக்கூடாது. மாநகராட்சி நிர்வாகமே தொடர்ந்து நடத்த வேண்டும்.
யார் பொறுப்பு?
* முத்துகிருஷ்ணன் (தி.மு.க.,):குழாய் பணி, தெரு விளக்கு பணி எதற்கு யார் பொறுப்பு என்றே தெரிவதில்லை. அடுத்தவரைக் கை காட்டி விட்டுச் சென்று விடுகின்றனர். யாரிடம் சொல்வது என்று தெரிவதில்லை. விளக்கு இன்றி கம்பங்கள் மட்டும் நடப்பட்டுள்ளது. தெரு விளக்கு எரியாமல் இருள் சூழ்ந்து திருட்டு சம்பவங்கள் நடக்கிறது.
* ராதாகிருஷ்ணன் (தி.மு.க.,) : தெரு விளக்கு பராமரிப்புக்கு தனி அலுவலர் நியமிக்க வேண்டும். பொருட்கள் தரமாக உள்ளதா என்று ஆய்வு செய்து பயன்படுத்த வேண்டும்.
* விஜயலட்சுமி (காங்.,):காங்கயம் ரோட்டில் எங்குமே தெரு விளக்கு எரிவதில்லை. ஒரு நாள் சரி செய்தால் அன்று மட்டும் எரியும். அடுத்த நாளே பழுதாகி விடும். மேயர் வார்டு பகுதியிலும் இதே நிலைதான் உள்ளது.
* செல்வராஜ் (இ.கம்யூ.,):தெரு விளக்கு பொருட்கள் தரமில்லை. கேபிள் மாற்றுவதாக கூறுகின்றனர். ஆனால், அனைத்து இடத்திலும் ஒட்டு போட்டுத்தான் உள்ளது. அவிநாசி ரோட்டில் கூட தெரு விளக்கு எரிவதில்லை. தெரு விளக்கு பொருத்த மின்வாரியத்துக்கு முறையாக விண்ணப்பம் செய்யாமல் இழுபறியாகிறது. வீதிகளுக்கு யுனிக் கோடு அளிப்பதில் பெரும் குழப்பம் உள்ளது. இதனால், பல வீதிகள் கணக்கிலேயே வருவதில்லை.
* குணசேகரன் (பா.ஜ.,):
என் வார்டில் தெரு விளக்கு அமைக்க மின் வாரியத்துக்கு பணம் செலுத்தப்பட்டதா என்றே தெரியவில்லை. இருள் சூழ்ந்து கிடக்கும் மாநகராட்சிக்கு வெளிச்சம் தர வேண்டும். இரண்டாண்டாக தெரு விளக்கு அமைக்கும் பணியை செய்ய முடியவில்லை. குப்பை அகற்றும் பணியில் பெரும் முறைகேடு நடக்கிறது. ஆட்கள், உபகரணம், வாகனம் எதுவும் இல்லை. எப்படி அவர்கள் பில் வாங்குகின்றனர் எனத் தெரியவில்லை.
அச்சத்தில் மாணவர்கள்
*ராஜேந்திரன் (இ.கம்யூ.,);
பணிகள் குறித்து மனு அளித்தால் அது உரிய பிரிவுக்குச் செல்வதில் தாமதமாகிறது. இதனால், தீர்மானத்துக்கு வருவதில்லை. மேலும் டெண்டர், மறு டெண்டர், நிதி ஒதுக்கீடு, பணி ஆணை என பல வகையில் பணிகள் செய்வதில் சிரமமும், தாமதமும் ஏற்படுகிறது. வெங்கடாசலபதி துவக்கப் பள்ளி 1939ல் கட்டியது. புதிய கட்டடம் கட்ட வேண்டும். பழுதடைந்து மாணவர்கள் அச்சத்தில் உள்ளனர்.
* காந்திமதி, தி.மு.க.,;4 வது குடிநீர் திட்டத்தில் வினியோக குழாய் பதிப்பு தாமதமாகிறது. குழி தோண்டுவதால் ரோடு சேதமாகிறது. பணிகள் திட்டமிட்டு செய்வதில்லை. தரமான பொருட்கள் பயன்படுத்துவதில்லை.
கண்காணிப்பு இல்லை
*சாமிநாதன், தி.மு.க.,;குடிநீர் திட்டப் பணியில் தொகை பெற்றுக் கொண்ட பணிகளைக் கூட இதுவரை செய்து முடிக்கவில்லை. பணிகளை அதிகாரிகள் கண்காணிப்பதில்லை. ஒப்பந்த நிறுவனங்களின் முறைகேடுகளுக்கு அதிகாரிகள் துணை போகின்றனர். செய்து முடித்தபணிகளுக்கு கவுன்சிலர்களிடம் கையெழுத்து பெற வேண்டும்.புது ரோடுகளை சேதப்படுத்தி குழாய் பதிக்கின்றனர். அந்த ரோட்டை பொது நிதியில் சரி செய்கின்றனர். இது எப்படி நடக்கிறது; ஏன் அதை செய்ய வேண்டும். ஆமை, நத்தையை விட மாநகராட்சி பணிகளில் வேகம் குறைவாக உள்ளது. 10 நாளில் முடிப்பதாக கூறிய பணியை ஆறு மாதமாகியும் செய்யவில்லை.
*குமார், ம.தி.மு.க.,:எஸ்.வி.,காலனி பள்ளிக்கு தனியார் ஒருவர் 36 லட்சம் நமக்கு நாமே திட்டத்தில் வகுப்பறை கட்ட நிதி வழங்கினார். அரசிடம் இத்திட்டத்தில் நிதி இல்லாமல், பணி துவங்காமல் கிடக்கிறது. இதை திரும்ப பெற்றுத் தர வேண்டும். முழு நிதியையும் அவர் செலவிட்டு வகுப்பறை கட்டத் தயாராக உள்ளார்.
நிதி தாமதம்
*கவிதா, தி.மு.க.,ஏழை மக்களுக்கு வழங்கும், ஈமச் சடங்கு நிதி வழங்காமல் ஆறு மாதங்களாக நிலுவையில் உள்ளது. திறக்கப்படாமல் உள்ள ஆரம்ப சுகாதார மையம் திறக்க வேண்டும்.
* சாந்தாமணி, ம.தி.மு.க.,;ஆப்த்தான நிலையில் உள்ள மேல்நிலைத் தொட்டிகள், அசம்பாவிதம் ஏற்படும் முன் இடித்து அகற்ற வேண்டும். எம்.பி., தொகுதி வளர்ச்சி நிதியில் வழங்கிய தெரு விளக்கு; போர்வல் கிணற்று மோட்டார் மின் இணைப்புகள் வழங்கப்படாமல் உள்ளது.
இவ்வாறு விவாதம் நடந்தது.
---
திருப்பூர் மாநகராட்சி கூட்டம் மேயர் தினேஷ்குமார் தலைமையில் நேற்று நடந்தது.