/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இலவச ஸ்கூட்டர் வழங்கியதில் முறைகேடு; சிறப்பு குழுவினர் 2 நாள் விசாரணை
/
இலவச ஸ்கூட்டர் வழங்கியதில் முறைகேடு; சிறப்பு குழுவினர் 2 நாள் விசாரணை
இலவச ஸ்கூட்டர் வழங்கியதில் முறைகேடு; சிறப்பு குழுவினர் 2 நாள் விசாரணை
இலவச ஸ்கூட்டர் வழங்கியதில் முறைகேடு; சிறப்பு குழுவினர் 2 நாள் விசாரணை
ADDED : ஜூன் 09, 2025 09:53 PM

இலவச ஸ்கூட்டர் வழங்கியதில் முறைகேடு தொடர்பாக, சிறப்பு குழுவினர் திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலகத்தில் இரண்டு நாட்கள் விசாரணையை முடித்துள்ளனர்.
திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலகம் வாயிலாக, இணைப்பு சக்கரம் பொருத்திய இலவச ஸ்கூட்டர் வழங்கியதில் நடந்த முறைகேடு தொடர்பாக புகார் எழுந்தது. இதுகுறித்து விசாரணை செய்வதற்காக, துணை கமிஷனர் ரவீந்திரநாத் சிங் தலைமையிலான ஐந்து பேர் அடங்கிய சிறப்பு குழுவினர் திருப்பூர் வந்தனர்.
குழுவினர், இரண்டு நாட்கள், கலெக்டர் அலுவலக வளாகத்திலுள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விசாரணை நடத்தினர். கடந்த மூன்று ஆண்டுகளில் ஸ்கூட்டர் பெற்ற மாற்றுத்திறனாளிகள் விவரம், ஆன்லைன் பதிவு மூப்பு அடிப்படையில்தான் ஸ்கூட்டர் வழங்கப்பட்டுள்ளதா; தகுதியற்ற நபர்கள் யாரேனும் ஸ்கூட்டர் பெற்றுள்ளனரா என, சிறப்பு குழுவினர் விரிவான ஆய்வு நடத்தியுள்ளனர்.
அம்பலமான உண்மைகள்
மாற்றுத்திறனாளி வெங்கடேஸ்வரன் பெயரில் பதிவு செய்த ஸ்கூட்டர், பொங்கலுாரை சேர்ந்த சேகர் என்கிற மாற்றுத்திறனாளிக்கு வழங்கப்பட்டிருந்தது. நம் நாளிதழில் வெளியான செய்திக்குப்பின், அந்த ஸ்கூட்டர் மீட்கப்பட்டு, வெங்கடேஸ்வரனிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில், மார்ச் 25ல் வேறு ஸ்கூட்டர் பதிவு செய்யப்பட்டு, சேகருக்கு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், திருப்பூரை சேர்ந்த கனகராஜின் ஸ்கூட்டர், உடுமலையை சேர்ந்த மற்றொரு மாற்றுத்திறனாளி கனகராஜூக்கு வழங்கப்பட்டிருந்தது.
நம் நாளிதழில் செய்தி வெளியானபின்னரே, உடுமலையிலிருந்து மீட்கப்பட்ட ஸ்கூட்டர், திருப்பூரை சேர்ந்த கனகராஜிடம் ஒப்படைக்கப்பட்டது. உடுமலை கனகராஜின் ஸ்கூட்டர் ஷோரூமில் இருப்பது தெரியவந்தது.
தகுதியற்ற மாற்றுத்திறனாளி ரேஷன் ஊழியர், அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஸ்கூட்டர் வழங்கியது, வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஒருவர் பெயரில் பதிவு செய்த ஸ்கூட்டரை, வேறு மாற்றுத்திறனாளிக்கு வழங்கியது, ஸ்கூட்டர் வழங்குவதில் ஆன்லைன் விண்ணப்ப பதிவு மூப்பு சரிவர பின்பற்றப்படாதது குறித்து, சிறப்பு குழுவினர், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தினரை கடிந்துகொண்டனர்.
இருப்பிடத்துக்கே சென்று விசாரணை
அதேபோல், பத்து மாற்றுத்திறனாளிகளின் இருப்பிடத்துக்கு நேரில் சென்ற குழுவினர், உண்மையான பயனாளிக்குதான் ஸ்கூட்டர் வழங்கப்பட்டுள்ளதா என ஆய்வு செய்தனர். குறிப்பாக, பொங்கலுாரை சேர்ந்த ஒருவரது வீட்டுக்கு சென்று, அவரால் ஸ்கூட்டர் ஓட்ட முடியுமா என்பதை ஆய்வு செய்து, உறுதிப்படுத்தினர்.
- நமது நிருபர் -