ADDED : ஏப் 21, 2025 11:23 PM
எஸ்.டி.பி.ஐ., சார்பில், மங்கலம் ஊராட்சி, 6வது வார்டு, எம்.எம்., நகர் பகுதி மக்கள், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த குறைகேட்பு கூட்டத்தில், ரோடு பணிகளில் முறைகேடு நடந்துள்ளதாக மனு அளித்தனர்.
அம்மக்கள் கூறியதாவது:
மங்கலம் ஊராட்சி 6வது வார்டு, எம்.எம்., நகர் ரோடு பழுதடைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்றநிலையில் உள்ளது. இப்பகுதியில் புதிய தார் ரோடு போடக்கோரி, மங்கலம் கிராமசபை கூட்டத்தில் பலமுறை மனு அளித்துள்ளோம்.
இந்நிலையில், அருகிலுள்ள 8வது வார்டில், கலீன் வீடு முதல் பாபு வீடு வரையுள்ள சாலையை பலப்படுத்தி 5.16 லட்சம் ரூபாயில் தார் சாலை; தவுலத் வீடு முதல் பாபு வீடுவரையிலான சாலையை பலப்படுத்தி 2.41 லட்சம் ரூபாயில் தார்சாலை அமைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு பலகை வைத்துள்ளனர்.
அறிவிப்பு பலகையில் குறிப்பிட்டுள்ள கலீல், பாபு மற்றும் தவுலத் வீடுகள் 8வது வார்டில் இல்லை; அவர்கள் மூவரும், பல ஆண்டுகளாக 6வது வார்டில் வசிக்கின்றனர். ஆறாவது வார்டு பகுதியில் சாலை பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்துவிட்டு, முறைகேடாக எட்டாவது வார்டில் ரோடு போட்டுள்ளனர். எங்கள் பகுதியில் ரோடு போடப்பட்டதாக குறிப்பிட்டு, எட்டாவது வார்டில் அறிவிப்பு பலகை வைத்துள்ளனர். கலெக்டர் விசாரணை நடத்தி, தவறு செய்தோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.