ADDED : ஆக 19, 2026 02:17 AM

திருப்பூர்: திருப்பூர் மாநகர பகுதியில் விபத்துக்களை குறைக்கவும், அதனை தடுக்கும் வகையில் சாலை விதிகளை பின்பற்ற வேண்டும் என போலீசார் தொடர்ந்து பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, திருப்பூர், கே.வி.ஆர். நகர் போக்குவரத்து போலீசார் சார்பில், 'ஹெல்மெட்' அணிவது உள்ளிட்ட சாலை விதிகளை பின்பற்ற வேண்டும் என, வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு செய்தனர். 'ஸ்பார்ட் பைன்' உள்ளிட்ட விதிமீறல்களுக்கு உண்டான அபராதம், சாலை விதிகளை மீறும் போது ஏற்படும் விபத்துகள் குறித்து விளக்கினர்.
கணக்கு காட்டவே... திருப்பூர் மாநகரில் போக்குவரத்து விதிமீறல்கள் என்பது தொடர்கதையாக இருந்து வருகிறது. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், சமீப காலமாக தலைமை தபால் அலுவலகம் முன், வாகனங்களை நிறுத்த கூடாது என்று ஏற்கனவே போலீசார் பலமுறை அறிவுறுத்தியும், எச்சரிக்கை செய்து பிளக்ஸ் வைத்தனர். ஆனால், இன்றளவும் பொதுமக்கள் அப்பகுதியில் வாகனங்களை நிறுத்தி விட்டு சென்று வருகின்றனர்.
விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்காவிட்டால் கூட, குறைந்தபட்சம் நடவடிக்கையாவது போக்குவரத்து போலீசார் எடுக்க வேண்டும். ஆனால், பெயரளவுக்கு ஒரு போலீஸ்காரை, தபால் ஆபீஸ் முன் நிறுத்தி வைத்து விடுகின்றனர்.
அவரும், 'வாகனங்களை இங்கு நிறுத்தாதீங்க. பக்கத்துல குமரன் காம்ப்ளக்ஸில் கொண்டு போய் நிறுத்துங்க,' என்று பிரசாரம் போல சொல்கிறார். ஆனால், யாரும் கேட்பதாக இல்லை. பெரும்பாலோனோர் ரோட்டின் மீதே வாகனங்களை நிறுத்துகின்றனர். ஒரு சிலர் மட்டும், குமரன் காம்ப்ளக்ஸ் செல்கின்றனர்.
இதேபோல, பார்க் ரோட்டில் ஒரு வழிப்பாதையில், தினமும் ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகள் ஆபத்தான முறையில் பயணம் செய்கின்றனர்.
பார்க் ரோட்டில் இருந்து வரும் வாகனம் சுற்றி சென்று பாலத்தை கடந்து 'யூடர்ன்' எடுக்காமல், விநாயகர் கோவில் பின்புறம் எதிர்புறமாக சென்று பாலத்தை அடைகின்றனர். இதுபோன்று ஏராளமான விதிமீறல்களை, அடுக்கி கொண்டே போகலாம்.
இதனையெல்லாம் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய போக்குவரத்து போலீசார் கண்டும் காணாமல் உள்ளனர். விழிப்புணர்வு என்பது, மீண்டும் அந்த தவறு நடக்க கூடாது, நடந்தால் அபராதம் போன்ற நடவடிக்கை உள்ளது என்பதை தெரிவிக்க மட்டும் தான்.
ஆனால், மாநகர போக்குவரத்து போலீசார், உயரதிகாரிகள் உத்தரவுக்கு, கணக்கு காட்ட ஆங்காங்கே வெறும் விழிப்புணர்வு மட்டும் செய்து வருகின்றனர்.
விபத்து அபாயம் உதாரணத்துக்கு, ரயில்வே ஸ்டேஷன் பஸ் ஸ்டாப், டவுன்ஹால் போன்ற சில முக்கிய சந்திப்புகள், ஐந்து நிமிடம் நின்றால் தெரியும் அங்கு ஏற்பட கூடிய விதிமீறல்களால் நெரிசல் மட்டுமல்ல, விபத்தும் ஏற்படும் சூழல் உள்ளது என்பது புரியும்.
அதிலும், காலை மற்றும் மாலை வேளையில், பள்ளி மாணவ, மாணவியர் கூட்டம் அதிகரிக்கும் போதே ஏற்படும் போக்குவரத்து நெரிசல் சொல்லி மாளாது.
எனவே, மாநகர போக்குவரத்து போலீசார் நிலைமையை புரிந்து கொண்டு விழிப்புணர்வோடு நிற்காமல், ரோந்து சென்று இதனை கண்காணித்து நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என்பதே, சாலை விதிகளை பின்பற்றி செல்லும் வாகன ஓட்டிகளின் மனகுமுறலாக உள்ளது.
ரயில்வே ஸ்டேஷன், தபால் ஆபீஸ், குமரன் சிலை ஆகியன முன் ஏற்படும் வாகன நெரிசலை கட்டுப்படுத்த, நிரந்தர தீர்வு ஏற்படுத்தும் வகையில், ஆக்கிரமிப்பு அகற்றுவதும் அவசியமான ஒன்று.
