/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நீச்சல் பழகும் வாய்ப்பு எளிதாகுமா?
/
நீச்சல் பழகும் வாய்ப்பு எளிதாகுமா?
ADDED : அக் 18, 2025 11:32 PM

ப ள்ளி கல்வித்துறை, மாவட்ட விளையாட்டுத்துறை சார்பில், பள்ளி மாணவ, மாணவியருக்கு திருப்பூர், 15 வேலம்பாளையம், ட்ரிக் அகாடமியில் மாவட்ட நீச்சல் போட்டி சமீபத்தில் நடந்தது.முந்நுாறுக்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
தண்ணீரில் நீச்சல் அடித்து குதுாகலிப்பது என்றால் மாணவ, மாணவியருக்கு அலாதி பிரியம் தான். ஆனால், திருப்பூர் மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி சார்பில் நீச்சல் குளம் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தித் தரப்படவில்லை. இதனால், நீச்சல் போட்டியில் பங்கேற்கும் ஆர்வம் இருந்தும், திருப்பூர் மாநகர பகுதியில் வசிக்கும் பள்ளி மாணவ, மாணவியருக்கு அதற்கான வாய்ப்பு குறைவாகவே கிடைக்கிறது. தனியார் நடத்தும் நீச்சல் பயிற்சி மையங்களுக்கு செல்லும் பயிற்சி பெறும் வீரர், வீராங்கனைகள் மட்டுமே போட்டிகளில் அதிகளவில் பங்கேற்பர்.
மாவட்ட அளவில் நீச்சல் பயிற்சி அளிக்கும் வகையிலான அகாடமிகளை மாநகராட்சி நிர்வாகம் தேர்வு செய்து, குறைந்த கட்டணத்தில் அல்லது இலவசமாக நீச்சல் பயிற்சி வழங்க தேவையான வாய்ப்பு, வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும். மாநகராட்சி சார்பில், நீச்சல் குளம் அமைப்பது இன்று வரை கனவாகவே உள்ளது.
இவ்விஷயத்தில், மாவட்ட நீச்சல் சங்கத்துடன் இணைந்து, மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி பள்ளி மாணவர், மாணவியருக்கு நீச்சல் கற்றுத்தர ஏற்பாடுகளை செய்தால், பயனுள்ளதாக இருக்கும்.