/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வறட்சி அபாயத்தை நோக்கி நகர்கிறதா பல்லடம்? காலத்தின் அவசியமாகிறது புதிய நீர் திட்டம்
/
வறட்சி அபாயத்தை நோக்கி நகர்கிறதா பல்லடம்? காலத்தின் அவசியமாகிறது புதிய நீர் திட்டம்
வறட்சி அபாயத்தை நோக்கி நகர்கிறதா பல்லடம்? காலத்தின் அவசியமாகிறது புதிய நீர் திட்டம்
வறட்சி அபாயத்தை நோக்கி நகர்கிறதா பல்லடம்? காலத்தின் அவசியமாகிறது புதிய நீர் திட்டம்
ADDED : மே 14, 2025 11:07 PM

- நமது நிருபர் -
பரந்து விரிந்த திருப்பூர் மாவட்டத்தின் பெரிய சட்டசபை தொகுதி பல்லடம். கிட்டதட்ட, 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். விசைத்தறி ஜவுளி, இறைச்சி கோழி வளர்ப்பு, விவசாயம், காற்றாலை ஆகியவை, முக்கிய தொழில்களாக உள்ளன. பல்லடத்தை சுற்றி விசைத்தறி மற்றும் பின்னலாடை தொழில் மையங்கள் நிரம்ப அமைந்துள்ளன.
இப்பகுதியில் விவசாயம் பிரதானமாக இருந்த நிலையில், இப்பகுதிக்கென பிரத்யேக நீராதாரம் எதுவும் இல்லாததால், நீர் தேவை என்பது, அதிகரித்துக் கொண்டே வருகிறது; மாவட்டத்தின் வறட்சியான பகுதி என்றும் சொல்லலாம்.
பாண்டியாறு பூர்வாங்க சபை ஒருங்கிணைப்பாளர் பிரபு கூறியதாவது:
பல்லடம் வட்டம் வறட்சியான பகுதியாக இருக்கிறது. அய்யம்பாளையம் மற்றும் சுல்தான்பேட்டை பகுதிகளை மையப்புள்ளியாக வைத்து, அதன் வட பகுதிகளில் உள்ள கிராமங்களின் நீர் தேவையை பூர்த்தி செய்ய அத்திக்கடவு - அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டத்தில் இணைக்க முடியும்.
தென் பகுதிகளில் உள்ள நகர, கிராமப்புறங்களின் நீர் தேவையை பூர்த்தி செய்ய, ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பதுதான் நிலை.
அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை நீடிக்கவும், ஆண்டு முழுக்க நீர் வினியோகிக்கவும், பவானியில் கூடுதல் நீர் வரத்து அவசியம். எனவே, பாண்டியாறு - மாயாறு திட்டத்தை நிறைவேற்றுவதால், பவானி அணைக்கு கூடுதலாக நீர் கிடைக்கும்.
இதன் வாயிலாக, அத்திக்கடவு திட்டத்துக்கு கூடுதலாக நீர் எடுக்க முடியும். நீர் மின் நிலையங்களுக்கான தண்ணீர் ஒருபுறம், மக்களுக்கான நீர்தேவை அதிகரித்து விட்ட காரணத்தால், பவானி ஆற்றுநீரை மையப்படுத்தி, நிறைய கூட்டு குடிநீர் திட்டங்கள் மறுபுறம் என, பவானி ஆற்றுநீர் பற்றாக்குறை ஏற்படும் அளவுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இதுதவிர, தொழிற்சாலை தேவைக்கும், 15 சதவீதத்துக்கும் அதிகமான நீர் எடுக்கின்றனர். எனவே, புதிதாக ஒரு திட்டத்தை, அதாவது, பாண்டியாறு - மாயாறு திட்டம் காலத்தின் அவசியமாகி இருக்கிறது.
இவ்வாறு, அவர் கூறினார்.