/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாணவர் சேர்க்கைக்கு அலைக்கழிப்பா?
/
மாணவர் சேர்க்கைக்கு அலைக்கழிப்பா?
ADDED : மே 22, 2025 03:38 AM
பல்லடம்; பல்லடம் வட்டார அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு அலைக்கழிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், சி.இ.ஓ., இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
கோடை விடுமுறை முடிந்து, விரைவில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. முன்னதாக, அரசுப் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க பெற்றோர் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்காக, தங்களுக்கு அருகாமையில் உள்ள பள்ளிகளில் சேர்க்கை பெற பெற்றோர் விரும்புகின்றனர். இதற்கிடையே, பல்லடம் ஒன்றியம், கரைப்புதுார், கணபதிபாளையம் பகுதிகளில், மாணவர் சேர்க்கைக்கு அலைக்கழிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், 'கரைப்புதுார், கணபதிபாளையத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில், இடம் காலியாக இல்லை என்றும், அருகிலுள்ள பள்ளிக்குச் சென்று சேர்க்குமாறும் கூறுகின்றனர். தேவையற்ற அலைக்கழிப்புக்கு பின்னரே சேர்க்கை பெறவேண்டிய நிலை உள்ளது. வேலைக்குச் செல்லும் பெற்றோர், அருகிலுள்ள அரசு பள்ளியில் சேர்க்கத்தான் விரும்புவர். ஆனால், பல்வேறு காரணங்களை கூறி அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தவிர்க்கப்படுகிறது. இது, தேவையற்ற மன உளைச்சலை ஏற்படுத்துகிறது,' என்றனர்.
பொதுமக்களின் குற்றச்சாட்டு தொடர்பாக சி.இ.ஓ., உதயகுமாரிடம் கேட்டதற்கு, ''மாணவர்கள் யாரையும் சேர்க்கை இல்லை என்று கூறி திருப்பி அனுப்பக் கூடாது என, அரசுப் பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக நடந்த ஆலோசனைக் கூட்டத்திலும் அறிவுறுத்தி உள்ளோம்,'' என்றார்.