/
வாராவாரம்
/
சித்ரா...மித்ரா (திருப்பூர்)
/
அரசியல்ல இதல்லாம் சாதாரணமப்பா...
/
அரசியல்ல இதல்லாம் சாதாரணமப்பா...
ADDED : செப் 30, 2025 01:04 AM

''அ ப்பப்பா... என்னக்கா இப்படி வெயில் கொளுத்துது,'' என புலம்பிய படியே வியர்வையை துடைத்தபடி சித்ராவின் வீட்டுக்குள் நுழைந்தாள் மித்ரா.
''வா மித்து... உட்காரு. ஜில்லுன்னு மோர் எடுத்துட்டு வர்றேன்'' என சொல்லிய படியே, பிரிட்ஜை திறந்து மோர் எடுத்து வந்து கொடுத்தாள் சித்ரா.
''கரூர்ல நடந்த சம்பவத்த நினைச்சா, மனசே பதறி போகுது. அநியாயமா அப்பாவிங்க செத்து போய்ட்டாங்களே அக்கா...'' என ஆதங்கத்துடன் ஆரம்பித்தாள் மித்ரா.
''ஆமான்டி மித்து. மனசு ஏத்துக்கவே மாட்டேங்குது. சின்ன குழந்தைங்க எல்லாம்... ரொம்ப கொடுமை. பெத்தவங்க மனசு என்ன பாடுபடும். வெள்ளகோவிலை சேர்ந்த ரெண்டு பேரு கூட மாட்டி செத்து போயிருக்காங்க மித்து. கரூர்ல நடக்கிற கூட்டத்துக்கு, அந்த மாவட்டத்தை சேர்ந்த கட்சிக்காரங்கள மட்டும் கூப்பிட வேண்டியது தானே; மத்த மாவட்டங்கள்ல இருந்தும், எதுக்கு கூட்டத்தை சேர்க்கிறாங்க. எலக்ஷன்ல ஒரு ஓட்டு தானே போட முடியும். ஒவ்வொரு மாவட்டத்துக்கும் போயா ஓட்டுப் போட முடியும்? இந்த மாதிரியெல்லாம் கூட்டம் சேர்த்தா, அது எல்லாத்தையும் ஏமாத்துற மாதிரியில்ல இருக்கு...'' ஆவேசமாக பேசினாள் சித்ரா.
தோழர்களின் சிபாரிசு ''இனியாவது, இந்த மாதிரி நடக்காம இருந்தா சரிதான்...'' என்ற மித்ரா, ''ரெண்டு நாள் முன்னாடி அவிநாசி பக்கம் போயிருந்தேன். ரோட்டோர ஆக்கிர மிப்பையெல்லாம் அப்புறப்படுத்தி, 'பளிச்'ன்னு வச்சிருக்காங்க. 'ரோட்டோரம் கடை வைக்க கூடாது'ன்னு, 'பிளக்ஸ்'ம் வச்சிருக்காங்க. 'பரவாயில்லீங்க்கா. ைஹவேஸ் ஆபீசர்ஸ் பாரபட்சம் இல்லாம, ஆக்கிர மிப்பையெல்லாம் எடுத்துட்டாங்க. இதே மாதிரி, அவிநாசி - திருப்பூர் ரோடு, திருப்பூர் சிட்டிக்குள்ளேயும் வகை தொகையில்லாம இருக்கற ஆக்கிரமிப்பை எடுத்தாங்கன்னா நல்லா இருக்கும்,'' என்றாள்.
''இவ்வளவு செஞ்சும், சண்டே அன்னைக்கு அவிநாசி புது பஸ் ஸ்டாண்ட்ல இருந்து பழைய பஸ் ஸ்டாண்ட் வரை, வழக்கத்துக்கு மாறாக நிறைய சாலையோர கடைகள் போட்டிருக்காங்க. இதனால, கடை வியாபாரிங்க, ரோட்ல படுத்து புரண்டு போராட்டம் பண்ற அளவுக்கு நிலைமை போயிடுச்சு. இதுல என்னென்னா, 'தோழர்'கள் தான், ஆக்கிரமிப்புக் கடைக்காரங்களுக்கு ரொம்ப 'சப்போர்ட்' பண்றாங்களாம்,''
''அதுக்காக கடைக்கு இவ்வளவுன்னு வசூலும் பண்றாங்களாம். நியாயமா, சாலையோர கடைகள நம்பியிருக்கறவங்களுக்கு மட்டும் கடை ஒதுக்குனா சரி. ரோட்டோர கடைகள கூட உள் வாடகைக்கு விடற அளவுக்கு சிலரு பண்றாங்களாம்; இதெல்லாம் கொஞ்சம் ஓவரா இல்ல...'' என, கோபம் காட்டினாள் மித்ரா.
''என்னமோ போ மித்து...'' சலித்துக் கொண்ட சித்ரா, ''மாசாமாசம் ஒவ்வொரு சண்டேயில, ஒவ்வொரு தாலுகாவுல ஆதார் அட்டை சிறப்பு முகாம் நடத்துறாங்க. லீவு நாள்ங்கறதால நிறைய பேரு வர்றாங்க. அவங்ககிட்ட, ஆதார் சம்மந்தப்பட்ட வேலைகளை செஞ்சு கொடுக்க, 100, 200 ரூபாய்ன்னு நிறைய காசு வாங்குறாங்கன்னு புகார் வருதாம்...'' என, சித்ரா சொன்னதும், ''ஏன்க்கா, அங்கங்க நடக்கிற உங்களுடன் ஸ்டாலின் முகாம்ல, ஆதார் அட்டை சார்ந்த வேலைகளை செய்றதுக்கு, முக்கியத்துவம் கொடுக்கலாம்ல...'' என யோசனை கூறினாள் மித்ரா.
ஒலிக்குது கோஷ்டி கானம் ''அந்த முகாம்ல, ஆளுங்கட்சிக்காரங்களோட கோஷ்டி மோதல் தான் பெரிசா இருக்கு...'' என்ற கட்சி மேட்டாருக்கு தாவினாள் சித்ரா.
''கார்ப்பரேஷன், 16,17,18 வார்டுகள்ல, 'உங்களுடன் ஸ்டாலின் முகாம்', புதிய பஸ் ஸ்டாண்ட் பக்கத்துல, நாலு நாளைக்கு முன்னாடி நடந்துச்சு. அத பார்க்க, கட்சி பொறுப்பாளருங்கற முறையில, கார்ப்பரேஷன் வி.ஐ.பி. போயிருக்காரு. அப்போ, 16வது வார்டு கிளை நிர்வாகி ஒருத்தர், 'என்னோட வார்டுக்குள்ள வர்றப்போ, எனக்கு சொல்லாம எப்படி வரலாம்'ன்னு கேட்டு வாக்குவாதம் பண்ணியிருக்காரு,''
''இதனால கடுப்பான கார்ப்பரேஷன் வி.ஐ.பி. 'இந்த மாதிரி பிரச்னை பண்ணீங்கன்னா... போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுத்திருவேன்னு, மிரட்டற தொனியில பேசவும், சலசலப்பாகிடுச்சாம். அதுக்கப்பறம், 'கோல்டு கிங்' தலையிட்டு, சமாதானம் செஞ்சு வச்சாராம்,'' என ஆளுங்கட்சி உரசலை சொல்லி முடித்தாள் சித்ரா.
''தாமரை கட்சியில கூட, இந்த மாதிரி கோஷ்டி பூசல் அம்பலமாகியிருக்குங்க அக்கா...'' என்ற மித்ரா தொடர்ந்தாள்.
''காங்கயத்துல தாமரைக்கட்சிக்காரங்க பி.எம். பிறந்தநாள் விழா நடத்தியிருக்காங்க. இதுல பங்கேற்க, மாநில இளைஞரணி தலைவரு வந்திருக்காரு. அவருக்கு கட்சி சார்பில, வரவேற்பு ஏற்பாடு தடபுடலா செஞ்சிருக்காங்க. ஆனா, ஏற்பாடுகளை செஞ்ச கட்சி நிர்வாகிகளை சந்திக்காமலயே, நேரடியா நிகழ்ச்சி நடக்கிற மேடைக்கு மாநில தலைவரு போயிட்டாராம். இதனால, கட்சிக்காரங்க ஏமாந்துட்டாங்களாம்...''
''நிகழ்ச்சி முடிஞ்சு போகும் போது, சும்மா கடமைக்கு தலையாட்டிட்டு போயிட்டாராம். என்ன மேட்டர்னு விசாரிச்சா, கட்சியோட மாவட்ட பொறுப்புல இருக்கற நிர்வாகிக்கும், இளைஞரணி பொறுப்புல இருக்கற நிர்வாகிக்கும் ஏழாம் பொருத்தமாம். இதோட வெளிப்பாடு தான், இந்த சம்பவம்ன்னு கட்சிக்காரங்களே பேசிக்க றாங்க...'' என்றாள்.
தடுமாறும் அரசு இயந்திரம் ''இப்படி கோஷ்டி பாடினால், கட்சி எப்படி வளரும்'' அங்கலாய்த்த சித்ரா, ''குமரன் வணிக வளாகம் கட்டி, 30 வருஷம் ஆகுதுல்ல. கட்டடம் ரொம்ப பழசாகிடுச்சு. அங்க சில கடைகளும், கவர்ன்மென்ட் ஆபீசும் இயங்குது. அங்கிருக்கிற ஒரு ஆபீசுக்கு வந்தவங்க மேல, கான்கிரீட் சிமென்ட் பூச்சு பெயர்ந்து விழுந்திருக்கு. எல்லாரும் அலறியடிச்சு ஓடியிருக்காங்க. இதுசம்மந்தமா, கார்ப்பரேஷன் ஆபீசர்க்கிட்ட புகார் கொடுக்கலாம்ன்னு கொஞ்சம் பேரு போயிருக்காங்க. ஆனா, ரெண்டு மணி நேரம் காத்திருந்தும், அவரு வராததால, திரும்பி வந்துட்டாங்களாம்...'' என்றாள்.
''அரசு இயந்திரம் எதுவும் சரியா இயங்கறது இல்லைங்க அக்கா,'' என்ற மித்ரா, ''ஊரக உள்ளாட்சி நிர்வாகத்துல, ஊராட்சி ஒன்றிய தலைவர்களுக்கு அரசு ஜீப் கொடுத்திருந்தாங்கள்ல. அவங்க பதவிக் காலம் முடிஞ்ச நிலைமையில, அவங்க பயன்படுத்திக்கிட்டு இருந்த ஜீப்பை, ரெவின்யூ டிபார்ட்மென்ட் ஆபீசர்ங்க பயன்படுத்தறாங்க. ஆனா, அந்த ஜீப்களை ஓட்ட டிரைவர்கள் இல்லாததால, ஊரக வளர்ச்சித்துறைல இருக்கற டிரைவர்களை தான் பயன்படுத்தறாங்களாம்,''
''அதே மாதிரி, கோ-ஆபரேட்டிவ், அக்ரி இன்ஜினியரிங் சார்பில, விவசாய வேலைக்கு மெஷின், டிராக்டர் போன்ற விவசாய உபகரணங்களை வாடகைக்கு விடறாங்களாம். ஆனா அதை இயக்கறதுக்கு அவங்ககிட்ட ஆட்கள் இல்லாததால், சும்மா காட்சிப் பொருள் மாதிரி வச்சிருக்காங்களாம்,'' என்றாள்.
''நீ சொல்றது கரெக்ட் தான் மித்து. ஹிந்து அறநிலையத்துறை சார்பில, கோவில் பணியாளர்களுக்கு மருத்துவ முகாம், பூண்டியில நடத்தியிருக்காங்க. இது சம்மந்தமா, எந்தவொரு முன்னறிவிப்பும், யாருக்கும் கொடுக்கலையாம். இதனால, துாரத்துல இருக்கற கோவில் பணியாளர்களால கலந்துக்க முடியாம போச்சாம். மருத்துவ பரிசோதனையில கூட, திருப்தியில்லைன்னு பேசிக்கிறாங்க,'' என்றாள்.
''எதுக்கு இப்படி 'கடமை'க்கு நடத்தணும்...'' என்ற மித்ரா, போலீஸ் மேட்டருக்கு தாவினாள்.
'நான் சொல்வதே சட்டம்' ''தெற்காலவுள்ள போலீஸ் ஸ்டேஷன்ல, லேடி போலீஸ் ஒருத்தரு, அவங்க நினைக்கிறது தான் அங்க நடக்கணுமாம். இவரை ஸ்டேஷன் ஆபீசர்னால கூட கட்டுப் படுத்த முடியலையாம். தனி ராஜாங்கம் நடத்துற அவங்க மேல பெரிய ஆபீசர் கூட நடவடிக்கை எடுக்க தயங்கறாங்கன்னா பார்த்துக்கோங்க...''
''அதே மாதிரி, சிட்டிக்குள்ல வேல பார்க்குற உதவி பெரிய ஆபீசர்ஸ், ஏனோ தானோன்னு தான் வேலை செய்றாங்க. குறிப்பா, மங்கலம் ரோடு பகுதி உதவி ஆபீசரின் செயல்பாடு சரியில்லைங்கற மாதிரி, பெரிய ஆபீசர் பீல் பண்றதாவும் ஒரு பேச்சு அடிபடுது,'' என்றாள் மித்ரா.
''நம்ம மாவட்டத்துல சர்வே டிபார்ட்மென்ட்ல வேல செய்ற ஆபீசர் முதல் சர்வேயர்ங்க வரை, பல பேரு, ரொம்ப வருஷமா ஒரே இடத்துல இருக்காங்களாம். 'கமிஷன்' கொட்டும் இடத்துல வேலை செய்றவங்கள, அந்த இடத்த விட்டு நகர மனசில்லாம இருக்காங்களாம். டிரான்ஸ்பர் ஆர்டர் போட வேண்டிய மாவட்ட அதிகாரியும், 'சைலன்டா' இருக்காராம்,'' என்றாள் சித்ரா.
கட்சி கடந்து 'கூட்டு' ''அக்கா... அவிநாசி மேட்டர் தெரியுமா?'' புதிர் போட்டாள் மித்ரா.
''சொல்லுடி, தெரிஞ்சுக்கறேன்...''
''அவிநாசி முனிசிபாலிட்டில வேல செய்யற ஸ்வீப்பர்ஸ் ரெண்டு பேரு, சேவூர் ரோட்டுல வேல செஞ்சப்ப, புல் வெட்டற மெஷின் ரிப்பேர் ஆனாதால ஆபீசுக்கு போய்ட்டாங்க. இதப்பத்தி, வார்டு கவுன்சிலர்கிட்ட சொல்றதுக்கு போயிருக்காங்க. ஆனா, அவரோட ஹஸ்பெண்ட், ஸ்வீப்பர்ைஸ தகாத வார்த்தைகளால் திட்டியிருக்காரு. ஒரு கட்டத்தில, ஜாதி பெயரை சொல்லி இழிவா பேசியிருக்கார்,''
''இதனால, அந்த ரெண்டு பணியாளர்களும், கமிஷனரிடம் புகார் கொடுத்தும் கண்டுக்கலையாம். அதுக்கப்பறம், போலீசில கம்ப்ளைன்ட் கொடுக்க முடிவு பண்ணது தெரிஞ்சு, ஆளுங்கட்சி, எதிர்க்கட்சின்னு பாகுபாடு பார்க்காம, கவுன்சிலர்கள் ஒன்னா சேர்ந்து, 'கட்டப்பஞ்சாயத்து' பண்ணி விஷயத்தை அமுக்கிட் டாங்களாம்,''
''இதல்லாம் அரசியல்ல சாதாரணமப்பா...'' என நடிகர் கவுண்டமணி பாணில சொல்லி சிரிச்ச சித்ரா, ''அதே ஊர்ல, போன வாரம் சூளை முதல் புதிய பஸ் ஸ்டாண்ட் வரைக்கும் ஆக்கிரமிப்பு எடுத்தாங்க. ஆனா, ஏகப்பட்ட இடத்தில, இருந்த ஆக்கிரமிப்பு கள அகற்ற கால அவகாசம் தந்தாங்க. இதனால, மக்கள் விரக்தி அடைஞ்சு கேட்டதுக்கு, 'எங்களுக்கு எப்போ எடுக்கறதுன்னு தெரியும். அப்ப தான் எடுப்போம்னு,' முகத்தில அடிச்ச மாதிரி 'செங்குத்தான' அதிகாரி சொன்னாராம். அவரு இப்டித்தான் பண்றாருன்னு, அவங்க டிபார்ட்மென்ட் ஸ்டாப்ேஸ புலம்பறாங்களாம்,'' என்றாள்.
''சரிங்க்கா... எங்கூட வர்றீங்களா. கடைவீதி வரைக்கும் போய்ட்டு வர்லாம்,'' என மித்ரா சொன்னதும், ''ஓ... போலாமே,'' என எழுந்தாள் சித்ரா.