/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மத்திய பஸ் ஸ்டாண்ட் அலங்கோலம்; பயணிகள் தவிப்பு
/
மத்திய பஸ் ஸ்டாண்ட் அலங்கோலம்; பயணிகள் தவிப்பு
ADDED : ஏப் 11, 2025 11:25 PM

திருப்பூர்: 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்ட் மோசமான நிலையில் பராமரிக்கப்படுகிறது. பயணிகள் தவிக்கின்றனர்.
திருப்பூரில் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் 40 கோடி ரூபாய் மதிப்பில் மத்திய பஸ் ஸ்டாண்ட் வளாகம் கட்டி முடித்து திறக்கப்பட்டது. பஸ் ஸ்டாண்டுக்கு ஐ.எஸ்.ஓ., தரச்சான்று பெறுவது என மேயர் அறிவித்தார். அதில், 'மண்ணைப் போடும்' விதமாகத் தான் பஸ் ஸ்டாண்ட் வளாகம் காணப்படுகிறது. பொதுக்கழிப்பிடங்கள் உரிய பராமரிப்பு இன்றி உள்ளன.
பஸ் ஸ்டாண்ட் நுழைவாயிலில் இரு புறங்களிலும் தள்ளுவண்டிகள், நடைபாதை கடைகள் ஆக்கிரமிப்பு காணப்படுகிறது. பஸ் நுழைவு மற்றும் வெளியேறும் பகுதிகளில் எந்த பாதுகாப்பும் இல்லை. எஸ்கலேட்டர் காட்சிப்பொருளாக உள்ளது. போதை ஆசாமிகள், காதல் ஜோடிகள் இதில் தஞ்சம் புகுந்து விடுகின்றனர்.
ஆட்டோ ஸ்டாண்ட் என்று அமைக்கப்பட்ட முன் பகுதி தற்போது மினி பஸ்கள் நின்று செல்லும் இடமாக மாறிவிட்டது. வணிக வளாகத்தில் உள்ள கடைகள் முன் பொருட்களை பரப்பி வைத்து ஆக்கிரமித்துள்ளனர். பயணிகள் நடக்க வழியில்லை.
காத்திருக்கும் இடங்களில் போட்டுள்ள சேர்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. 'டெர்மினல் பில்டிங்'கின் பெரும்பாலான பகுதி 'குடி'மகன்கள் மற்றும் நாடோடிகளாகத் திரியும் நபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. காமராஜ் ரோட்டைக் கடக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள சுரங்க நடைபாதை இது வரை திறக்கப்படாமல் பூட்டப்பட்ட நிலையிலேயே உள்ளது.
இந்த பாதை குப்பை கழிவுகள் வீசும் தொட்டியாக மாறி வருகிறது.பல்வேறு வகையிலும் மத்திய பஸ் ஸ்டாண்ட் சீரழிந்து காணப்படுகிறது.
முழுமையாக சீரமைத்து முறையாக பராமரிக்க வேண்டும். நகரின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றுத்துக்கு எடுத்துக் காட்டாக விளங்கும் பஸ் ஸ்டாண்ட் வளாகம் சிறப்பாக இருந்தால் மட்டுமே நகருக்கு வருவோர் மனதில், நகரம் குறித்த நல்ல எண்ணம் ஏற்படும் என்பதை உணர வேண்டும்.
(மேலும் படங்கள்: பக்கம் 3)