/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கால்நடை ஆம்புலன்ஸ் சேவை தொடர்பு எளிமையாகுமா?
/
கால்நடை ஆம்புலன்ஸ் சேவை தொடர்பு எளிமையாகுமா?
ADDED : நவ 26, 2024 07:22 AM
திருப்பூர்; 'அரசின் சார்பில் துவங்கப்பட்டுள்ள நடமாடும் கால்நடை ஆம்புலன்ஸ் இலவச சேவையை எளிமைப்படுத்த வேண்டும்' என, கால்நடை வளர்ப்போர் எதிர்பார்க்கின்றனர்.கால்நடை வளர்ப்போர் வசதியை கருத்தில் கொண்டு, கால்நடைகள் இருக்கும் இடத்திலேயே அவசர சிகிச்சை வழங்கும் வகையில், அரசின் சார்பில் நடமாடும் கால்நடை ஆம்புலன்ஸ் இலவச சேவை துவங்கப்பட்டது.
தேவையான அனைத்து அத்தியாவசிய கருவி, உபகரணம், மருந்து ஆகியவை ஆம்புலன்ஸிலேயே இருக்கும். ஒரு கால்நடை மருத்துவர், உதவியாளர், ஓட்டுநர் ஆகியோர் இருப்பர்.நடக்க இயலாத கால்நடைகளை வாகனத்தில் ஏற்ற 'ஹைட்ராலிக் லிப்ட்' பொருத்தப்பட்டுள்ளது. கால்நடை வளர்ப்போர் '1962' என்ற இலவச தொலைபேசி எண் வாயிலாக அழைத்தால், சென்னையில் உள்ள கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்படும். அதனை தொடர்ந்து, அவசர உதவி தேவைப்படும் இடத்துக்கு ஆம்புலன்ஸ் அனுப்பி வைக்கப்படும் என, அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.இத்திட்டத்தின் மீதான விழிப்புணர்வு அதிகரித்து வரும் நிலையில், இலவச அழைப்பு எண் பல நேரங்களில், 'பிஸி'யாகவே இருப்பதால், கால்நடை வளர்ப்போர் இணைப்பு கிடைக்காமல் சோர்ந்து விடுகின்றனர் என்ற ஆதங்கம் உள்ளது. இக்குறையை போக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கால்நடை வளர்ப்போர் எதிர்பார்க்கின்றனர்.