வறட்சியால் வாடும் தென்னையை காப்பாற்ற பெருமழை பெய்யாதோ?: நீரை விலைக்கு வாங்கி போராடும் விவசாயிகள்
வறட்சியால் வாடும் தென்னையை காப்பாற்ற பெருமழை பெய்யாதோ?: நீரை விலைக்கு வாங்கி போராடும் விவசாயிகள்
UPDATED : செப் 04, 2026 05:21 PM
ADDED : செப் 04, 2026 04:21 PM

உடுமலை: பருவமழை பெய்யாததால் வறட்சி நிலை துவங்கி, நீராதாரங்கள் வறண்டு வருவதுடன், நிலத்தடி நீர்மட்டமும் தொடர்ந்து சரிந்து வருவதால், நீண்ட கால பயிரான தென்னையை காப்பாற்ற புதிய போர்வெல் அமைத்தல், தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்துவது என விவசாயிகள் போராடி வருகின்றனர்.
பி.ஏ.பி., யில் உயிர் தண்ணீர் வழங்கினால் மட்டுமே, லட்சக்கணக்கான தென்னை மரங்களை காப்பாற்ற முடியும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். உடுமலை, குடிமங்கலம் வட்டாரங்களில், 35 ஆயிரம் ெஹக்டேருக்கும் அதிகமான பரப்பில், பல லட்சம் தென்னை மரங்கள் நீண்ட கால பயிராக பராமரிக்கப்பட்டு வருகின்றன.
தென்னை மரங்களுக்கு ஆண்டு முழுவதும் சீரான நீர் தேவைப்படுவதால், இப்பகுதி விவசாயிகள் கிணறு மற்றும் போர்வெல் நீரை முக்கிய நீராதாரமாக பயன்படுத்தி வருகின்றனர்.
பருவமழை காலங்களில் கிடைக்கும் மழைநீர் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதுடன், கிணறு, குட்டை உள்ளிட்ட நீர்நிலைகளுக்கும் நீர்வரத்தை ஏற்படுத்தும். ஆனால் நடப்பு பருவத்தில் மழை பெய்யாததால், விவசாய கிணறுகளில் நீர்மட்டம் குறைந்து வருகிறது.
ஏற்கனவே உள்ள போர்வெல்களிலும் நீர்மட்டம் குறைந்து, தென்னை மரங்களுக்கு தேவையான தண்ணீரை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
சரியும் நிலத்தடி நீர் மழைப்பொழிவு குறைந்ததன் தாக்கமாக, நிலத்தடி நீர்மட்டமும் வேகமாக சரிந்து வருகிறது; பல ஆண்டுகளாக பயன்பாட்டில் உள்ள போர்வெல்களில், முன்பு கிடைத்த அளவுக்கு தற்போது தண்ணீர் கிடைப்பதில்லை.
சில இடங்களில் புதிதாக ஆயிரம் அடி வரை போர்வெல்களை அமைத்து வருகின்றனர். இதற்காக ஒரு லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக செலவிட வேண்டியுள்ளது. ஆனால் புதிய போர்வெல் அமைத்தும் எதிர்பார்த்த அளவு தண்ணீர் கிடைக்காத பகுதிகளும் உள்ளன.
இதனால், போர்வெல் அமைப்பதற்காக செலவு செய்த தொகையும் விவசாயிகளுக்கு கூடுதல் சுமையாக மாறியுள்ளது.
விலைக்கு வாங்கி பாசனம் தென்னை மரங்களை காப்பாற்றுவதற்காக, பல விவசாயிகள் தற்போது தண்ணீரை விலைக்கு வாங்கி வருகின்றனர். லாரிகள் மற்றும் டிராக்டர் டேங்கர்கள் வாயிலாக தண்ணீர் கொண்டு வரப்பட்டு, தென்னை மரங்களுக்கு பாசனம் செய்யப்படுகிறது.
தேவனுார்புதுார், ஆண்டியூர் சுற்றுப்பகுதிகளில், பல கி.மீ., துாரம் தள்ளி அமைந்துள்ள கிணறுகளில் இருந்து தண்ணீரை விலைக்கு வாங்கி மரங்களை காப்பாற்றி வருகின்றனர்.
ஒருபுறம் தேங்காய் உற்பத்தி குறைந்து வரும் நிலையில், மறுபுறம் தண்ணீரை விலைக்கு வாங்கி பாசனம் செய்வதால், சாகுபடி செலவு பல மடங்கு அதிகரித்துள்ளது.
பல ஆண்டுகள் வளர்த்து பராமரித்து வரும் தென்னை மரங்களை, தண்ணீர் இல்லாமல் காயவிட விவசாயிகள் விரும்பவில்லை. ஒரு தென்னை மரம் காய்ந்து போனால் அதை மீண்டும் வளர்த்து மகசூல் பெற பல ஆண்டுகள் ஆகும்.
இதனால் கிடைக்கும் வருமானத்தைவிட, அதிகமாக செலவு செய்தாவது மரங்களை பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் விவசாயிகள் உள்ளனர்.
காய்ந்து வரும் தென்னைகள் தொடர்ந்து பாசன நீர் கிடைக்காததால் தென்னை மரங்களில் குரும்பை உதிர்வு, காய் பிடிப்பு குறைவு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது.
நீண்டகால வறட்சி தொடர்ந்தால் மரங்களின் வளர்ச்சி பாதிக்கப்படுவதுடன், எதிர்கால மகசூலும் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. தென்னை சாகுபடி என்பது ஒரே பருவத்தில் முடிந்துவிடும் பயிர் அல்ல. பல ஆண்டுகளாக பராமரித்து வரும் மரங்களை பாதுகாப்பதே விவசாயிகளின் முக்கிய கவலையாக உள்ளது.
நிவாரணம் கிடைக்குமா? வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும். வறட்சி பாதித்த பகுதிகளை அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்து, தென்னை மரங்களின் பாதிப்பு குறித்து கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.
பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்குவதுடன், தென்னை மரங்களை காப்பாற்ற பி.ஏ.பி., நான்கு மண்டல பாசன பகுதிக்கும், திருமூர்த்தி அணையிலிருந்து உயிர் தண்ணீர் வழங்க வேண்டும்.
நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் வகையில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள், தடுப்பணைகள், கசிவுநீர் குட்டைகள் உள்ளிட்ட நீராதாரப் பணிகளை அதிக அளவில் மேற்கொள்ள வேண்டும்.
ஏற்கனவே உள்ள நீர்நிலைகளை தூர்வாரி, மழைநீரை சேமிக்கும் நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தவும் விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.
