/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பருவ மழைக்காலத்தில் குடிநீரின் தரத்துக்கு பரிசோதனை அவசியம்! காட்சிப்பொருளான களநீர் ஆய்வு பெட்டி
/
பருவ மழைக்காலத்தில் குடிநீரின் தரத்துக்கு பரிசோதனை அவசியம்! காட்சிப்பொருளான களநீர் ஆய்வு பெட்டி
பருவ மழைக்காலத்தில் குடிநீரின் தரத்துக்கு பரிசோதனை அவசியம்! காட்சிப்பொருளான களநீர் ஆய்வு பெட்டி
பருவ மழைக்காலத்தில் குடிநீரின் தரத்துக்கு பரிசோதனை அவசியம்! காட்சிப்பொருளான களநீர் ஆய்வு பெட்டி
ADDED : அக் 23, 2024 12:42 AM

உடுமலை : உடுமலை பகுதியில், பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், களநீர் பரிசோதனை பெட்டியை பயன்படுத்தி, கிராமங்களில், குடிநீரின் தரத்தை பரிசோதிக்கவும், நோய்த்தடுப்பு முன்னெச்சரிக்கையாக கொசு ஒழிப்பு பணிகளை தீவிரப்படுத்தவும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் ஒன்றியங்களுக்குட்பட்ட, 72 ஊராட்சிகளுக்கு திருமூர்த்தி அணையை ஆதாரமாகக்கொண்ட கூட்டுக்குடிநீர் திட்டங்கள் வாயிலாக, குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.
இத்திட்டங்களில், பற்றாக்குறை ஏற்படும் போது, உள்ளூர் நீராதாரங்களான போர்வெல்களை பயன்படுத்தி, நிலைமையை சமாளிக்கின்றனர்.
இந்நிலையில், மேல்நிலைத்தொட்டிகள், நீர் உந்து நிலையங்கள் மற்றும் குடிநீர் வினியோகத்துக்கான இதர கட்டமைப்புகள் பராமரிப்பில், உள்ளாட்சி நிர்வாகத்தினர் அலட்சியமாக உள்ளனர்.
மேலும், பிரதான குழாய் உடைப்பு சீரமைப்பில், குடிநீர் வடிகால் வாரியத்தினர் அலட்சியம் காட்டுவதால், உடைப்பு வழியாக கழிவு நீர் கலப்பது உள்ளிட்ட பிரச்னைகள் தொடர்கதையாக உள்ளது.
இதனால், கூட்டுக்குடிநீர் திட்டங்களின் வாயிலாக வினியோகிக்கப்படும் குடிநீரின் தரம் கேள்விக்குறியாகியுள்ளது.
பல கிராமங்களில், மழைக்காலத்தில், செம்பழுப்பு நிறத்தில், குடிநீர் வருகிறது. இதே போல் மழைக்கு பிறகு, உள்ளூர் நீராதாரங்களான போர்வெல்களில் நீர்மட்டம் மாறி, நீரின் தரமும் மாறுகிறது.
அத்தகைய தண்ணீரை குடிநீராக பயன்படுத்தும் போது, மக்களுக்கு உடல்நல குறைபாடுகள் ஏற்பட்டு வருகிறது.
நீண்ட காலமாக இப்பிரச்னைகள் இருந்தாலும், மழைக்காலத்தில் இயல்பான பாதிப்புகள் என குடிநீரின் தரம் குறித்து யாரும் கண்டுகொள்வதில்லை.
முன்பு இப்பிரச்னைக்கு தீர்வாக, குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், களநீர் பரிசோதனை பெட்டி ஊராட்சிகளுக்கு வினியோகிக்கப்பட்டது; குடிநீர் வினியோகிப்பாளர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு இந்த பெட்டியை பயன்படுத்தி, குடிநீரின் தரத்தை பரிசோதிக்க பயிற்சியும் அளித்தனர்.
குறிப்பிட்ட இடைவெளிகளில், மேல்நிலைத்தொட்டியில் இருந்து மாதிரி எடுத்து பரிசோதித்த பிறகு, குடிநீர் வினியோகித்தனர்.
குடிநீரை பரிசோதிக்கணும்
தற்போது இத்தகைய களநீர் பரிசோதனை பெட்டியும் அதற்குரிய பொருட்களை வழங்கினாலும், உள்ளாட்சி அமைப்பினர் குடிநீரை பரிசோதிக்க அலட்சியம் காட்டுகின்றனர்.
பல ஊராட்சிகளில், களநீர் பரிசோதனை பெட்டி காட்சிப்பொருளாகி விட்டது. பருவமழை காலத்தில், முறையாக பரிசோதித்து, அதன் விபரங்களை மேல்நிலைத்தொட்டி அருகே எழுதி வைத்தால் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இது குறித்து, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க எதிர்பார்ப்பு நிலவுகிறது.
நோய் தடுப்பிலும் அலட்சியம்
உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் ஒன்றியங்களில், பரவலாக மழை பெய்து, குடியிருப்புகளில், மழை நீர் தேங்கியுள்ளது. கொசுத்தொல்லையும் அதிகரித்துள்ளது.
ஒன்றிய நிர்வாகங்கள் தரப்பில், டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகளுக்காக குறிப்பிட்ட அளவு நிதி, ஒன்றிய பொது நிதியில் சுகாதார துறையினருக்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
ஆனால், கொசு ஒழிப்புக்காக நியமிக்கப்பட்ட தற்காலிக பணியாளர்கள் கிராமங்களுக்கு வருவதே தெரிவதில்லை என உடுமலை, குடிமங்கலம் ஒன்றிய குழு கூட்டங்களில், புகார் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
எனவே, சுகாதாரத்துறை பணிகளை, ஒவ்வொரு ஊராட்சியாக வெளிப்படையாக மேற்கொள்ளவும் மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.