/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'சைவ சித்தாந்தத்தை படித்து உணர்வது மிகவும் எளிது'
/
'சைவ சித்தாந்தத்தை படித்து உணர்வது மிகவும் எளிது'
ADDED : ஜன 20, 2025 06:31 AM

திருப்பூர் : 'சிவபெருமான் என்கிற உயர்ந்த பொருளை வழிபடுகின்ற கொள்கை என்பதால், சைவ சித்தாந்தத்தை மிக எளிதாக படித்துவிடலாம்' என, சைவ சித்தாந்த பயிற்சி வகுப்பு துவக்க விழாவில் ஆசிரியர் சிவசண்முகம் பேசினார்.
திருவாவடுதுறை ஆதீன சைவ சித்தாந்த நேர்முக பயிற்சி மையம் வாயிலாக, திருப்பூரில், கடந்த ஒன்பது ஆண்டுகளாக சைவ சித்தாந்த வகுப்பு நடைபெறுகிறது. ஐந்தாவது பயிற்சி வகுப்பு துவக்க விழா, ஹார்வி குமாரசாமி மண்டபம், திருவருள் அரங்கில் நேற்று நடைபெற்றது. சொக்கலிங்கம் தலைமை வகித்தார்.
அதில், சைவ சித்தாந்த ஆசிரியர் சிவசண்முகம் பேசியதாவது:
அரிசி முதலான பொருட்களை, உண்பதற்கு ஏற்றவாறு பக்குவப்படுத்துவதை சமையல் என்கிறோம். அதேபோல், மனிதனுக்கு வாழ்வியல் முறைகளை சொல்லிக்கொடுத்து பதப்படுத்துவது சமயம்.
எந்த நெறிமுறையும் இன்றி இருந்த மனிதகுலத்தை, இப்படித்தான் இருக்கவேண்டும் என, ஆண்டாண்டு காலமாக முன்னோர், நம்மை நெறிப்படுத்தியுள்ளனர்; அந்த நெறிப்படுத்துதல்தான், சமயம்.
சிவபெருமானை கடவுள் என்று ஏற்றுக்கொண்டு, போற்றுகின்ற நெறிதான், சைவம். யாராக இருந்தாலும், அவர் எங்கிருந்தாலும், எந்நிலையில் இருந்தாலும், எக்கோலம் கொண்டாலும், எம்மொழி பேசுபவராக இருந்தாலும், சிவத்தை கடவுள் என்று ஏற்றுக்கொள்வாரானால், அவர் சைவராகிறார். சைவர்களுக்கென்று சில கொள்கைகள் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. அந்த கொள்கைகளுக்கு, சைவ சித்தாந்தம் என்று பெயர்.
இந்த உலகில் உயர்ந்த பொருள் எளிமையானதாகத்தான் இருக்கும். சிவபெருமான் என்கிற உயர்ந்த பொருளை வழிபடுகின்ற கொள்கை என்பதால், சைவ சித்தாந்தத்தை மிக எளிதாக படிக்கலாம். படிக்கவேண்டும், படிப்பவை நமக்கு புரிய வேண்டும் என்கிற ஆர்வம் நமக்குள் இருந்தால் போதும். வரும் 2026 ம் ஆண்டு வரை, இரண்டு ஆண்டுகளுக்கு, மாதந்தோறும் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை, காலை, 10:00 மணி முதல் மாலை, 4:00 மணி வரை வகுப்பு நடைபெறும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
சைவ சித்தாந்த பயிற்சியில் சேர்ந்துள்ள புதிய மாணவர்கள் பங்கேற்றனர். மொத்தம், 150 பேருக்கு சைவ சித்தாந்த பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பயிற்சியில் இணைய விரும்புவோர், 98659 24485, 96007 18704 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.