/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கொடுப்பதற்கு ஒரு மனம் வேண்டும்... மறுப்பதற்கும் ஒரு மனம் வேண்டும்!
/
கொடுப்பதற்கு ஒரு மனம் வேண்டும்... மறுப்பதற்கும் ஒரு மனம் வேண்டும்!
கொடுப்பதற்கு ஒரு மனம் வேண்டும்... மறுப்பதற்கும் ஒரு மனம் வேண்டும்!
கொடுப்பதற்கு ஒரு மனம் வேண்டும்... மறுப்பதற்கும் ஒரு மனம் வேண்டும்!
ADDED : ஜன 28, 2024 12:15 AM
''ஐயா வணக்கங்க. எங்கிட்ட, 23 லட்சம் பணமிருக்கு. அதுல, 10 லட்சத்தை, நீங்க கட்டிட்டு இருக்கற கேன்சர் ஆஸ்பத்திரிக்கு குடுக்கலாம்னு இருக்கேன்; வாங்கிக்கிறீங்களா...?''
குரலில் தென்பட்ட லேசான நடுக்கம், வயது முதிர்ந்தவர் என்பதை எளிதாக காட்டிக் கொடுத்தது. திருப்பூர் அரசு மருத்துவமனை வளாகத்தில், மாநகராட்சியுடன் இணைந்து, புற்றுநோய் மருத்துவமனை கட்டும் பணியை முன்னெடுத்துள்ள திருப்பூர் ரோட்டரி அறக்கட்டளை நிர்வாகிக்கு, இப்படியானதொரு அழைப்பு வருகிறது.
மொத்தம், 90 கோடி ரூபாய் பட்ஜெட்டில், 30 கோடி ரூபாயை மக்களின் பங்களிப்பாக செலுத்த வேண்டிய நிலையில், இதுவரை, 17 கோடி ரூபாயை திரட்டியுள்ளனர் அறக்கட்டளையினர். 10 லட்சம் ரூபாய் என்பது பெரும் தொகை தானே என்ற எண்ணத்தில், மொபைல்போனில் அழைத்தவரை தொடர்பு கொள்கிறார் அந்த நிர்வாகி.
''எனக்கு, 92 வயசாச்சுங்க; அங்கங்க கொஞ்சம் சொத்து இருக்கு. ஒரு மகன், ரெண்டு பெண் பிள்ளைங்க. பசங்களுக்கு என் சொத்து தான் முக்கியம்; நான் ஆறு மாசமா, முதியோர் இல்லத்துல தான் இருந்தேன். ஏதோ என்கிட்ட கையெழுத்து வாங்கறதுக்காக, என் மகன், என்னை திரும்பவும் வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டான்; திரும்பவும் முதியோர் இல்லத்துக்கு தான் போகப்போறேன்,''
''எங்கிட்ட, 23 லட்சம் ரூபா இருக்கு; தினமும், சாப்பாட்டுக்கு, 200 ரூபா தான் செலவாகுது; இத்தனை பணத்தை வைச்சிட்டு நான் என்ன பண்றது; நீங்க கேன்சர் ஆஸ்பத்திரி கட்றதா கேள்விப்பட்டேன். அதுக்கு நன்கொடையா, 10 லட்சம் தர்றேன், வாங்கிக்கிறீங்களா?' என கேட்க, நெகிழ்ந்து, உடைந்து போனார் அந்த அறக்கட்டளை நிர்வாகி.
அந்த பெரியவரின் தாராள குணத்தை பாராட்டி விட்டு, அந்த பணத்தை வாங்க மறுத்து, 'உங்க செலவுக்கு அந்த பணத்தை வைச்சுக்கோங்க அய்யா' என, மனதார வாழ்த்தி திரும்பியுள்ளார்.
ஏழை, பணக்காரன், உயர்ந்தவன், தாழ்ந்தவன் என, மனிதனின் பார்வையில் பல பரிமாணங்கள் தெரிந்தாலும், 'உயிர்' என்பது, பொதுவானதொரு விஷயம் தான். இறப்பு தரும் இழப்பால் வெளியேறும் கண்ணீரும், துக்கமும், சோகமும், அனைவருக்கும் ஒன்று தான், என்பதையும் மறுப்பதற்கில்லை.
அதுவும், புற்றுநோய் என்கிற, உயிர்க்கொல்லி நோயின் பிடியில் இருந்து தப்பி பிழைக்க பலரும் போராடி வரும் நிலையில், ஆபத்பாந்தவன் போல் அமையவுள்ள கேன்சர் மருத்துவமனை விரைவில் கட்டி எழுப்பப்பட வேண்டும் என்பதே பொதுவான எதிர்பார்ப்பு. இன்னும், 10 கோடி ரூபாய்க்கு மேல், மக்களின் பங்களிப்பை திரட்ட வேண்டிய நிலையில் தாராள மனதுக்காரர்களை, எதிர்நோக்கி காத்திருக்கின்றனர், அறக்கட்டளையினர்.