/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
புதிய சம்பள ஒப்பந்தம் தொடர்பாக செயற்குழு கூடுகிறது! பனியன் உற்பத்தியாளர் சங்கங்கள் அறிவிப்பு
/
புதிய சம்பள ஒப்பந்தம் தொடர்பாக செயற்குழு கூடுகிறது! பனியன் உற்பத்தியாளர் சங்கங்கள் அறிவிப்பு
புதிய சம்பள ஒப்பந்தம் தொடர்பாக செயற்குழு கூடுகிறது! பனியன் உற்பத்தியாளர் சங்கங்கள் அறிவிப்பு
புதிய சம்பள ஒப்பந்தம் தொடர்பாக செயற்குழு கூடுகிறது! பனியன் உற்பத்தியாளர் சங்கங்கள் அறிவிப்பு
UPDATED : டிச 06, 2025 05:53 AM
ADDED : டிச 06, 2025 05:19 AM

திருப்பூர்: பனியன் தொழிலாளர் சம்பள உயர்வு பேச்சுவார்த்தையில், தொழிற்சங்கங்கள் வழங்கிய பொது கோரிக்கைகள் தொடர்பாக செயற்குழுவை கூட்டி, முடிவு செய்வதாக உற்பத்தியாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் தெரிவித்தனர். வரும் 26ம் தேதி 3வது கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
திருப்பூரில், தொழிற்சங்கங்களும், உற்பத்தியாளர் சங்கங்களும் நான்கு ஆண்டுக்கு ஒருமுறை பேச்சுவார்த்தை நடத்தி, பனியன் தொழிலாளருக்கு சம்பள உயர்வு நிர்ணயித்து, ஒப்பந்தம் மேற்கொள்ளப்படுகிறது. முந்தைய ஒப்பந்த காலம் முடிவடைந்ததால், புதிய ஒப்பந்தம் மேற்கொள்வதற்காக, இருதரப்பு சங்கத்தினரும் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர்.
பங்கேற்கும் சங்கங்கள் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம், தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்கம் (சைமா), திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்கம் (டீமா), பின்னலாடை துணி உற்பத்தியாளர் சங்கம் (நிட்மா), தென்னிந்திய இறக்குமதி இயந்திர பின்னலாடை துணி உற்பத்தியாளர் சங்கம் (சிம்கா), திருப்பூர் ஏற்றுமதி பின்னலாடை உற்பத்தியாளர் (டெக்மா) ஆகிய ஆறு உற்பத்தியாளர் சங்கங்களும்; சி.ஐ.டி.யு., - ஏ.ஐ.டி.யு.சி., - எல்.பி.எப்., - ஐ.என்.டி.யு.சி., - ஏ.டி.பி., - எச்.எம்.எஸ்., - பி.எம்.எஸ்., எம்.எல்.எப்., மற்றும் டி.டி.எம்.எஸ்., ஆகிய ஒன்பது தொழிற்சங்கங்களும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன.
கடந்த, நவ. 20ல் நடத்தப்பட்ட முதல் கட்ட பேச்சுவார்த்தையில், பொதுவான சம்பள ஒப்பந்த கோரிக்கை தயாரித்து வழங்க தொழிற்சங்கங்களுக்கு அறிவுறுத்தப்பட்டு, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது; 2ம் கட்ட பேச்சுவார்த்தை, டிச. 5ல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
பொது கோரிக்கை தயாரிப்பு இதற்கிடையே கடந்த மாதம் 24ம் தேதி, தொழிற்சங்கங்கள் தரப்பில், கூட்டுக்கமிட்டி கூட்டம் நடத்தப்பட்டு, பொது கோரிக்கை தயாரிக்கப்பட்டது.
120 சதவீத சம்பள உயர்வு, பஞ்சப்படியாக மாதம் 5,000 ரூபாய்; பயணப்படியாக, 50 ரூபாய்; வீட்டு வாடகைப்படியாக, 3000 ரூபாய்; ஓவர் டைம் பேட்டாவில், 100 சதவீத உயர்வு, 'குரூப் இன்சூரன்ஸ்' உள்ளிட்ட பொது கோரிக்கைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
இருதரப்பு சங்கத்தினரிடையே 2ம் கட்ட பேச்சுவார்த்தை, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க அரங்கில் நேற்று மாலை நடைபெற்றது. திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியம் தலைமை வகித்தார்.
பனியன் உற்பத்தியாளர் சங்கங்கள் மற்றும் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்று பேசினர். தொழிற்சங்கத்தினர், கூட்டு கமிட்டியில் முடிவு செய்யப்பட்ட பொது கோரிக்கைகளை முன்வைத்து பேசினர்.
தொழிற்சங்கங்களின் பொது கோரிக்கைகள் தொடர்பாக, உற்பத்தியாளர் சங்கத்தினர், தங்கள் செயற்குழுவை கூட்டி, விவாதித்து முடிவு செய்வதாக தெரிவித்தனர். இதையடுத்து, வரும் 26ம் தேதி, மூன்றாவது கட்ட பேச்சுவார்த்தை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

