/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உணவு தந்தால் போதாது ஊதியமும் உயரட்டும்
/
உணவு தந்தால் போதாது ஊதியமும் உயரட்டும்
ADDED : அக் 25, 2025 01:05 AM
திருப்பூர்: 'துாய்மைப்பணியாளர்களுக்கு மூன்று வேளை உணவு தருவது மட்டுமல்ல; அவர்களுக்கான ஊதியத்தை உயர்த்துவதோடு, பணி நிரந்தரமும் செய்யப்பட வேண்டும்'' என்று சி.ஐ.டி.யு., வேண்டுகோள் விடுத்துள்ளது.
சென்னை மாநகராட்சி துாய்மைப்பணியாளர்களுக்கு மூன்று வேளையும் உணவு வழங்கும் திட்டத்துக்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது அடுத்த கட்டமாக பிற பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்ட சி.ஐ.டி.யூ., சுகாதார பணியாளர் சங்க செயலாளர் ரங்கராஜ் கூறியதாவது:
அதிகாலை முதலே களத்தில் பணியாற்றும் துாய்மைப் பணியாளர்களுக்கு இந்த திட்டம் நன்மை அளிக்கும். அவர்கள் குடும்ப பொறுப்பில் இது சற்று தளர்வை தருவதால் வரவேற்கிறோம்.
அதே சமயம் மாநிலம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் துாய்மைப் பணியாளர்கள் ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் போன்ற கோரிக்கைகளை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் ஒப்பந்த நடைமுறை தவிர்த்து, நேரடி பணி நியமனம், சட்ட ரீதியான குறைந்த பட்ச ஊதியம் உள்ளிட்ட பலன்கள் வழங்கப்பட வேண்டும். வேலை நேரத்தில் மாற்றம் செய்வது, ஷிப்ட் நடைமுறை போன்ற நடவடிக்கை அவசியம். அப்போது தான் பணியாளர்கள் தங்கள் குடும்பத்தையும் கவனிக்க முடியும்.
பணியாளர்கள் தரப்பில் எதிர்பார்த்துள்ள கோரிக்கைகளை நிறைவேற்றாமல் உணவு வழங்கும் திட்டத்தை நிதி ஒதுக்கி அறிவித்துள்ளனர். இது பணியாளர்கள் கோரிக்கைகளை மடை மாற்றும் வகையில் மாறிவிடக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.

