UPDATED : செப் 05, 2026 07:13 PM
ADDED : செப் 05, 2026 07:12 PM
திருப்பூர் மாவட்டத்தில் வரும் நாட்களில் பகல் நேர வெப்பநிலை கணிசமாக உயர்ந்து, 100 டிகிரி பாரன்ஹீட்டை எட்டக்கூடும் என வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் மற்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளன.
திருப்பூரில் கடந்த வாரம் அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸாக பதிவானது. வரும் நாட்களில் இது மேலும் 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்து, 36 முதல் 38 டிகிரி செல்சியஸ் வரை பதிவாக வாய்ப்புள்ளது. உயர்ந்தபட்ச வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
அதேசமயம், சில பகுதிகளில் இடி, மின்னல் மற்றும் சுழல் காற்றுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது. வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், லேசான துாறல் மழையும் பெய்யக்கூடும். தென்மேற்கு திசையில் இருந்து மணிக்கு 6 முதல் 10 கி.மீ., வேகத்தில் காற்று வீசும் என கணிக்கப்பட்டுள்ளது.
சுழல் காற்று வீச வாய்ப்புள்ளதால், ஐந்து மாதங்களுக்கு மேற்பட்ட வாழை மரங்களுக்கு முட்டுக்கொடுக்க வேண்டும். கரும்பு பயிர்களுக்கு தோகை உரித்து விட்டம் கொடுக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
முன்பட்டத்தில் பயிரிடப்பட்டு, அறுவடை நிலையில் உள்ள சிறுதானியங்கள் மற்றும் நிலக்கடலையை துாறல் மழையில் நனையாதவாறு பாதுகாப்பான இடங்களில் வைக்க வேண்டும்.
நிலவும் சீதோஷ்ண நிலையைக் கருத்தில் கொண்டு, கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்துவதுடன், போதுமான குடிநீர் வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
