ADDED : செப் 10, 2025 10:00 PM
உடுமலை; பேரூராட்சிகளில், வேலை உறுதி திட்டத்தை செயல்படுத்த அரசு நிதி ஒதுக்கீடு செய்ய தொழிலாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
உடுமலை பகுதியிலுள்ள, தளி, கணியூர், சங்கராமநல்லுார், மடத்துக்குளம் ஆகிய பேரூராட்சிகள், விவசாயம் சார்ந்த பகுதியாக உள்ளது. அங்குள்ள தொழிலாளர்களுக்கு பெரும்பாலான நாட்கள் வேலைவாய்ப்பு இருப்பதில்லை.
எனவே, நகர்ப்புற வேலை உறுதி திட்டத்தை தங்கள் பேரூராட்சிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு ஆர்வம் காட்டாததால், பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பின்றி பாதித்துள்ளனர். இத்திட்டத்தின் நிலை குறித்தும், நிதி ஒதுக்கீடு குறித்தும் அரசு தரப்பில், எவ்வித விளக்கமும் தரப்படவில்லை. இதனால், பேரூராட்சி நிர்வாகத்தினரும் குழப்பத்தில் உள்ளனர்.
கடந்தாண்டு திருப்பூர் மாவட்டத்தில், முத்துார், குமரலிங்கம் பேரூராட்சிகளில், நகர்ப்புற வேலை உறுதி திட்டத்தின் கீழ், தொழிலாளர்களை தேர்வு செய்து, பணி அட்டை வழங்கினர். ஆனால், தொழிலாளர்களுக்கு வேலை வழங்கவில்லை.
திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என தொழிலாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதை கண்டித்தும், அரசின் கவனத்தை ஈர்க்கவும், பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் தொழிலாளர்கள் தயாராகி வருகின்றனர்.