ADDED : அக் 14, 2024 11:54 PM

'வெற்றிகரமான கணிதம் கூட பூஜ்ஜியத்தில் தான் தொடங்கும்; எனவே, முதல் முயற்சியில் தோல்வியடைந்துவிடுமோ என்று பயப்பட வேண்டாம்'
- கலாம்.
கலாமின் ஆக்கப்பூர்வத் தன்னம்பிக்கை கூற்றுகளால், படிக்கும் வயதிலேயே, தொழில்முனைவோர் ஆகும் எண்ணம், ஆயிரக்கணக்கானோர் நெஞ்சங்களில் விதைக்கப்பட்டது. அது, முளைவிட்டு வளர்ந்த பிறகு, கல்விப்பயணம் நிறைவுறும் முன்னரே, தொழிலில் கால் பதித்து, இன்று சுய தொழில் முனைவோராக உயர்ந்தவர் ஏராளம். இதற்கு, திருப்பூரின் முன்னுதாரணமாகத் திகழும் சிலர், நம்முடன் பகிர்ந்தவை:
வாய்ப்பை நீயே ஏற்படுத்திக்கொள்
(1) பரத்ராஜா, 'டி-சர்ட்' உற்பத்தியாளர், இளங்கோ நகர், திருப்பூர்:
'நிப்ட்-டீ' கல்லுாரியில், காஸ்ட்யூம் டிசைன் அண்ட் பேஷன்' என்ற பட்டம் பயின்றேன்; கல்லுாரி முடித்து, தொழில் குறித்து தெரிந்துகொள்ள, பின்னலாடை நிறுவனத்தில், 'டிசைனர்' பணியில் இருந்தேன். ஓராண்டு பயிற்சிக்கு பிறகு, ஆண்கள் மற்றும் சிறுவர்களுக்கான, 'ஓவர் சைஸ் டி-சர்ட்' உற்பத்தி செய்து கொண்டிருக்கிறேன். என்னை போன்ற மாணவர்களுக்கு, அப்துல்கலாம் தான், சரியான முன்மாதிரியாக இருக்கிறார்.
'வாய்ப்புக்காக காத்திருக்காதே... உனக்கான வாய்ப்பை நீயே ஏற்படுத்திக்கொள்' என்று, கலாம் கூறியதுபோல், சுயமாக முயற்சி செய்து வருகிறேன். எதிர்காலத்தில், ஏற்றுமதி வர்த்தகம் செய்ய வேண்டும் என்பது எனது வாழ்நாள் லட்சியம்.
பயந்தால் வரலாறு படைக்க முடியாது
(2) ஸ்ருதி, பெண்களுக்கான ஆடை விற்பனையாளர், பல்லடம் ரோடு, மங்கலம்:
என் தந்தை, விசைத்தறி ஜவுளி தொழில் செய்து வருகிறார்; அத்தொழிலை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், 'அப்பேரல் பேஷன் டிசைனிங்' படித்தேன். ஆனால், தற்போது விசைத்தறி தொழில் வேண்டாம் என்று கூறியதால், பெண்கள் மற்றும் சிறுமியறுக்கான ஜவுளி ரகங்கள் விற்பனை செய்யும் ேஷாரூம் நடத்தி வருகிறேன். புதிதாக தொழில் துவங்கி, நான்கு மாதங்களாகிறது; படிப்பு முடிந்ததும், அப்துல்கலாமின் புத்தகங்களை அதிகம் படிப்பேன்.
'பிரச்னைகளை சகித்துக்கொள்ளவும், எதிர்கொள்ளவும் துணியுங்கள்... பயந்தால் வரலாறு படைக்க முடியாது' என்று கூறியிருக்கிறார். அதன்படியே, தைரியமாக சுய தொழில் செய்ய முடிவெடுத்தேன்... நிச்சயம் வெற்றி பெறுவேன்.
நீ நடந்தால் அதுவே ஒரு பாதை
(3) மாலினி, ராக்கியாபாளையம், திருப்பூர்:
எனது சொந்த ஊர் ஊட்டி; 'பேஷன் டிசைனிங்' படிக்க வேண்டுமென, திருப்பூர் வந்து, 'நிப்ட்-டீ' கல்லுாரியில் படித்தேன்; 2017-2020 - பேஷன் அப்பேரல் மேனேஜ்மென்ட் படித்தேன். மருத்துவ படிப்பு எனது விருப்பமாக இருந்தது, திடீரென, பிளஸ் 2 முடித்ததும், பேஷன் டிசைனிங்க்கு மாறிவிட்டேன். ஆறு மாதம் சிரமமாக இருந்தது; கல்லுாரியில் படிக்கும் போது, 'இன்டஸ்ட்ரியல் விசிட்' சென்ற பிறகுதான், 'எம்ப்ராய்டரிங்' மெஷினை நேரில் பார்த்தேன். 'சிங்கிள் ெஹட்' இயந்திரம் வாங்கி, எம்ப்ராய்டரிங் மற்றும் 'ஆஸ்திரேலியா சாப்ட்வேர்' மூலம், 'ஆன்லைன் டிசைனிங்' பயிற்சி அளித்து வருகிறேன். புத்தகம் படிப்பது எனக்கு பிடிக்கும். கலாமின் உயிர்ப்புள்ள வார்த்தைகளே என்னை வார்த்தெடுத்தது என்றும் கூறலாம்.
'நீ நடக்க பாதை இல்லையென கவலைப்படாதே... நீ நடந்தால் அதுவே ஒரு பாதை' என்று கலாம் கூறியிருக்கிறார். பள்ளி வாழ்க்கை துவங்கி, எனது முழு வளர்ச்சிக்கு காரணம், கலாம் கவிதைகள் தான்.
நீ எண்ணியது உன்னை வந்து சேரும்
முகமது இப்ராஹிம், திருப்பூர்.
'கார்மென்ட் டிசைனிங் அண்ட் புரொடக்ஷன்' என்ற தொழில் வழிகாட்டும் கல்வியை படித்தேன். படிக்கும் போதே, தந்தை இறந்துவிட்டதால், இரண்டாம் ஆண்டு படிக்கும் போதே, சொந்த தொழிலில் இறங்கிவிட்டேன். நிறுவனங்களுக்கான, உள்ளாடை தயாரிப்பு 'ஜாப் ஒர்க்' தொழிலை செய்து வருகிறேன். படிப்பு முடிந்ததும், முழுவதும் தொழிலில் இறங்கிவிட்டேன். கல்லுாரி படிக்கும் போது, அப்துல்கலாம் கண்ட கனவு என, பேராசிரியர்கள் அடிக்கடி எங்களுக்கு வழிகாட்டினர். தொழிலுக்கு வந்த போது, பனியன் தொழில் மோசமாக இருந்தது; தற்போதுதான், கஷ்டப்பட்டு நல்ல நிலைக்கு கொண்டு வந்திருக்கிறேன்.
'நீ யாராக இருந்தாலும் பரவாயில்லை; நீ எண்ணுவது விண்மீனாக இருந்தாலும்உன் உழைப்பால் நீ எண்ணியது உன்னை வந்து சேரும்... நீ நீயாக இரு' என்ற கலாமின் வரிகள் எனக்கு பாடம் கற்றுக்கொடுத்தது. இந்தியாவை வல்லரசாக உயர்த்த, அவர் காட்டிய வழியில் அனைவரும் பயணிக்க வேண்டும்.
கலாமின் ஆக்கப்பூர்வத் தன்னம்பிக்கை கூற்றுகளால், படிக்கும் வயதிலேயே, தொழில்முனைவோர் ஆகும் எண்ணம், ஆயிரக்கணக்கானோர் நெஞ்சங்களில் விதைக்கப்பட்டது. அது, முளைவிட்டு வளர்ந்த பிறகு, கல்விப்பயணம் நிறைவுறும் முன்னரே, தொழிலில் கால் பதித்து, இன்று சுய தொழில் முனைவோராக உயர்ந்தவர் ஏராளம். இதற்கு, திருப்பூரின் முன்னுதாரணமாகத் திகழும் சிலர், நம்முடன் பகிர்ந்தவை:
