/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
காந்திபுரத்துக்கு இணையாக 'கார்த்திபுரம்'
/
காந்திபுரத்துக்கு இணையாக 'கார்த்திபுரம்'
ADDED : ஜன 06, 2024 12:42 AM

திருப்பூர்;'கோவை மாவட்டம், நீலாம்பூரில் உருவாக்கப்படும், 'கார்த்திபுரம்' நகரம், கோவை காந்திபுரத்துக்கு இணையான வளர்ச்சியை பெறும்' என, அதன் நிர்வாக இயக்குனர் கார்த்திகேயன் கூறினார்.
கோவை, நீலாம்பூரில், 200 ஏக்கர் பரப்பளவில், 'கார்த்திபுரம்' என்ற பெயரில் நவீன நகரத்தை உருவாக்கவுள்ள கார்த்திகேயன் மற்றும் நிறுவன துணை நிர்வாக இயக்குனர் நவீன் ஆகியோருக்கு, திருப்பூர் மண்பாண்ட தொழிலாளர்கள் குலாலர் சங்கம் சார்பில், குலாலர் திருமண மண்டபத்தில் பாராட்டு விழா நடந்தது. திருப்பூர் மாவட்ட தலைவர் ஜெயராமன் தலைமை வகித்தார்.
தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர் நல வாரிய முன்னாள் தலைவர் நாராயணன் பேசுகையில், ''கல்வி, மருத்துவம், ரியல் எஸ்டேட் துறையில் கால்பதித்து, சிறந்த முறையில் செயலாற்றி வரும் கார்த்திகேயன், குலாலர் இன மக்கள் அடுத்தடுத்த நிலைக்கு உயர சிறந்த வழிகாட்டியாக உள்ளார்,'' என்றார்.
கார்த்திபுரம் நிர்வாக இயக்குனர் கார்த்திகேயன் பேசுகையில், ''கடந்த, 45 ஆண்டுகால அனுபவத்தின் விளைவாக நம்பிக்கை, நாணயம், நேர்மை என்ற கோட்பாடுகளை மனதில் நிறுத்தி, தொழில் செய்து வருகிறோம். நீலாம்பூரில், 'கார்த்திபுரம்' என்ற பெயரில் புதிதாக உருவாகும் நவீன நகரம், கோவை காந்திபுரம், ரேஸ்கோர்ஸ் மற்றும் ஆர்.எஸ்., புரம் ஆகியவற்றின் கலவையாக மாறும்,'' என்றார்.
திருப்பூர், கோவை, சேலம், ஈரோடு, நாமக்கல் என பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த குலாலர் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.