உப்பாற்றில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடரணும்!அதிகாரிகளுக்கு விவசாயிகள் எச்சரிக்கை
உப்பாற்றில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடரணும்!அதிகாரிகளுக்கு விவசாயிகள் எச்சரிக்கை
UPDATED : செப் 21, 2026 04:36 PM
ADDED : செப் 21, 2026 04:32 PM

உடுமலை: உடுமலை அருகே, உப்பாறு ஓடையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த, தனியார் கோழிப்பண்ணையின் மேல்நிலைத்தொட்டி உள்ளிட்ட கட்டுமானங்களை, அரசுத்துறையினர் ஒருங்கிணைந்து அகற்றினர். ஓடை முழுவதிலும் ஆக்கிரமிப்பை அகற்றாவிட்டால், போராட்டம் தொடரும் என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் அதிகாரிகளிடம் தெரிவித்ததால் பரபரப்பு நிலவியது. தாராபுரம் அருகேயுள்ள உப்பாறு அணைக்கு, பி.ஏ.பி., பிரதான கால்வாய் அரசூர் ஷட்டரில் இருந்து ஓடையில் தண்ணீர் திறக்கப்படுகிறது.
இந்த ஓடை பல இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்டு, மழைக்காலங்களிலும் நீரோட்டம் தடைபடுவதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
'பெரியபட்டி அருகே தனியார் கோழிப்பண்ணை நிர்வாகத்தினர் ஓடையின் நீரோட்ட பாதையில், மேல்நிலைத்தொட்டி, பண்ணை கட்டடம் கட்டியுள்ளனர்; ஆக்கிரமிப்பை முழுமையாக அகற்ற வேண்டும்,' என தமிழ்நாடு விவசாயிகள பாதுகாப்பு சங்கத்தினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆய்வு செய்த அதிகாரிகள், கோழிப்பண்ணை நிர்வாகத்தினருக்கு ஆக்கிரமிப்பை அகற்றிக்கொள்ள காலக்கெடு விதித்து நோட்டீஸ் வினியோகித்தனர்.
குறிப்பிட்ட நாட்களுக்குள் ஆக்கிரமிப்பு அகற்றப்படாத நிலையில், நேற்று காலை உடுமலை தாசில்தார் அருணா, நீர்வளத்துறை உதவி பொறியாளர் விஜயசேகர், குடிமங்கலம் பி.டி.ஓ., நாட்ராயன், இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி உள்ளிட்ட குழுவினர் முன்னிலையில், ஆக்கிரமிப்பு அகற்றும் பணி துவங்கியது.
முதற்கட்டமாக, ஓடையில் கட்டப்பட்டிருந்த மேல்நிலைத்தொட்டி இடிக்கப்பட்டது.
அதிகாரிகள் குழுவினர் கூறுகையில், 'பெரியபட்டி உப்பாறு இடது கரையை ஆக்கிரமித்து, அதே பகுதியைச்சேர்ந்த தங்கவேல் என்பவர் மேல்நிலைத்தொட்டி கட்டியிருந்தார். கோழிப்பண்ணை கட்டடம் கட்டும் பணியும் நடக்கிறது. விவசாயிகள் புகார் அடிப்படையில், அளவீடு செய்து ஆக்கிரமிப்பு அகற்றும் பணி துவங்கியுள்ளது. அப்பகுதியிலுள்ள நிரந்தர ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்படும்,' என்றனர்.
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் செந்தில்குமார் கூறுகையில், ''உப்பாறு ஓடையில் கோழிப்பண்ணை நிர்வாகத்தினர் கட்டுமான பணிகளை துவக்கும் போதே, நீர்வளத்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தோம். எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை; கட்டுமான பணிகளை தனியார் நிர்வாகத்தினர் எவ்வித தடையும் இல்லாமல் செய்தனர். பல கட்ட போராட்டத்துக்கு பிறகே, தற்போது ஆக்கிரமிப்புகளை அகற்றுகின்றனர். இதே போல், ஓடை முழுவதும் பல இடங்களில் ஆக்கிரமிப்பு உள்ளது. அவற்றையும் முழுமையாக நீர்வளத்துறையினர் அகற்ற வேண்டும். இல்லாவிட்டால் எங்களது போராட்டம் தொடரும்,'' என்றனர்.
