ADDED : பிப் 04, 2024 02:02 AM
பல்லடம்;பல்லடம் அருகே பனப்பாளையத்தை சேர்ந்த ஜெயபால் மகன் கவுதம் 25; பேக்கரி தொழிலாளி. இவருக்கு ஏற்பட்ட விபத்துக்கான இன்சூரன்ஸ் தொகையின் முதல் கட்ட தொகை, 11 லட்சம் ரூபாய் இவரது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது.
இதை அறிந்த கவுதமின் நண்பர்கள் சிலர், பணத்தை அபகரிக்க திட்டமிட்டனர். கடந்த சில தினங்களுக்கு முன், கவுதமை கடத்தி சென்று, ரூமில் அடைத்து வைத்து பணம் கேட்டு மிரட்டினர். பணத்தை எடுக்க வேண்டி, கவுதமை வங்கிக்கு அழைத்துச் சென்ற போது, மூன்று பேரை போலீசார் சுற்றி வளைத்தனர். இதில், அறிவொளி நகரை சேர்ந்த பிரகாஷ் 25 என்பவர் மட்டும் பிடிபட்டார். மேலும், 9 பேர் தலைமறைவான நிலையில், போலீசார் தேடி வந்தனர். அருள்புரம் அருகே பதுங்கி இருந்த, 4 பேரை, பல்லடம் போலீசார், நேற்று முன்தினம் கைது செய்தனர்.
பனப்பாளையத்தை சேர்ந்த சின்னதுரை மகன் ராஜேஷ்குமார், 26, தெற்குபாளையம் மீரா மொய்தீன் மகன் சாகுல் அமீது, 23, அறிவொளி நகர் முகமது மொய்தீன் மகன் முகமது அஷ்ரப், 26 மற்றும் நாரணாபுரம் சுந்தரராஜ் மகன் அருள்செல்வன், 25 ஆகிய நான்கு பேரும் கைது செய்யப்பட்டனர்.