/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அதிநவீனங்களுடன் அணிவகுக்கிறது 'நிட் - டெக்'
/
அதிநவீனங்களுடன் அணிவகுக்கிறது 'நிட் - டெக்'
ADDED : பிப் 23, 2024 12:06 AM

திருப்பூர்;திருமுருகன்பூண்டி ஹைடெக் இன்டர்நேஷனல் வளாகத்தில், வரும் மார்ச் 1 முதல் 4ம் தேதி வரை 17வது 'நிட்-டெக்' கண்காட்சி நடக்கிறது. உலகளாவிய அதிநவீன பின்னலாடை உற்பத்தி இயந்திரங்கள் அனைத்தும் ஓரிடத்தில் சங்கமிக்கின்றன.
225 நிறுவனங்கள்... 325 அரங்குகள்
'நிட் - டெக்' கண்காட்சி தலைவர் ராயப்பன் கூறியதாவது:
ஆசியாவிலேயே நிட்டிங் தொழில் துறைக்கு பிரத்யேகமாக நடத்தப்படுவது, 'நிட் - டெக்' கண்காட்சி மட்டும்தான். திருமுருகன் பூண்டியில் உள்ள ஹைடெக் இன்டர் நேஷனல் வளாகத்தில், 17-வது 'நிட்-டெக்' கண்காட்சி மார்ச் 1ல் துவங்கி 4ம் தேதி வரை நடக்கிறது. இரண்டு லட்சம் சதுர அடியில், சர்வதேச தரத்திலான அனைத்து வசதிகளுடன், பிரமாண்டமான கண்காட்சி அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் உள்பட உலகளாவிய நாடுகளைச்சேர்ந்த 225 நிறுவனங்கள், 325 அரங்குகளில், அதிநவீன பின்னலாடை உற்பத்தி இயந்திரங்களை, முழு இயக்க நிலையில் காட்சிப்படுத்துகின்றன.
உயர் தொழில்நுட்ப இயந்திரங்கள்
உலக சந்தையின் தேவைக்கு ஏற்ப, பாலியெஸ்டர், விஸ்கோஸ் போன்ற செயற்கை இழை ஆடை தயாரிப்பை அதிகரிப்பது காலத்தின் கட்டாயமாகிறது. அந்தவகையில், ஜெர்மனி, ஜப்பான், இத்தாலி நாட்டு நிறுவனங்கள், செயற்கை இழை ஆடை தயாரிப்பை பலப்படுத்தும் நிட்டிங் இயந்திரங்களை கொண்டுவருகின்றன.
உப்பு இன்றி சாயமேற்றும் ஜெர்மனி நாட்டு டையிங் இயந்திரம்; உயர் தொழில்நுட்பத்துடன் கூடிய டிஜிட்டல் பிரின்டிங், ரோட்டரி, ஓவல் பிரின்டிங் இயந்திரங்கள், துணி இழப்பை 2 சதவீதமாக குறைக்கும், இத்தாலி, ஜப்பான் நாட்டின், கட்டிங் இயந்திரங்களும் இடம் பெறுகின்றன.
தைக்கும்போதே கூடுதல் நுால் மற்றும் துணியை உறிஞ்சி தொழிற்சாலையின் துாய்மையை உறுதிப்படுத்தும் தையல் மெஷின்; அமெரிக்கா, ஆஸ்திரேலியா, துருக்கி நாடுகளின் தயாரிப்பில், அனைத்துவகை இயந்திர உதிரிபாகங்களும் கண்காட்சியில் வைக்கப்படுகின்றன.
ரூ.600 கோடி நவீனம்; ரூ.200 கோடி கொள்முதல்
திருப்பூர் மட்டுமின்றி ஈரோடு, கரூர், சென்னை போன்ற தமிழகத்தின் பிற மாவட்டங்கள்; டில்லி, லுாதியானா, ஐதராபாத், மும்பை, கோல்கத்தா, சூரத் உள்பட நாடு முழுவதும் உள்ள பின்னலாடை உற்பத்தி துறையினர், கண்காட்சியை பார்வையிட்டு, வர்த்தக விசாரணைகள் நடத்த உள்ளனர்.
மொத்தம் 600 கோடி ரூபாய் மதிப்பிலான நவீன பின்னலாடை உற்பத்தி இயந்திரங்கள் கண்காட்சியில் இடம்பெறுகின்றன.
ஏற்கனவே 200 கோடி ரூபாய் மதிப்பிலான இயந்திரங்களை கொள்முதல் செய்ய, பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் வர்த்தக விசாரணை நடத்தி உறுதி செய்துவிட்டன. நான்கு நாள் கண்காட்சியில், மொத்தம் 500 கோடி ரூபாய் மதிப்பிலான மெஷின் கொள்முதலுக்கான உடனடி வர்த்தக விசாரணை நடைபெறும் என எதிர்பார்க்கிறோம்.
அன்று ரூ.4 ஆயிரம் கோடி... இனி ரூ.1 லட்சம் கோடி?
திருப்பூர் பின்னலாடை உற்பத்தி துறையினரின் தொடர் தொழில்நுட்ப மேம்பாட்டை உறுதி செய்து, வர்த்தகத்தை வளர்ச்சி பெறச்செய்வதில் நிட்-டெக் கண்காட்சியின் பங்களிப்பு மிக முக்கியமானதாக உள்ளது.
கடந்த 1993ல் முதல் நிட் - டெக் கண்காட்சி நடைபெற்றபோது, திருப்பூரின் பின்னலாடை ஏற்றுமதி வெறும் 4 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது. தற்போது, 34 ஆயிரம் கோடியை கடந்துவிட்டது. அடுத்த சில ஆண்டுகளுக்குள், திருப்பூரின் ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு பின்னலாடை வர்த்தக மொத்த மதிப்பு, 1 லட்சம் கோடியை எட்டிப்பிடிக்கும் என்கிற நம்பிக்கை பிறந்துள்ளது.
நான்கு நாள் நிட்டெக் கண்காட்சியை, திருப்பூர் பின்னலாடை உற்பத்தி துறையினர், அனைத்து ஜாப்ஒர்க் துறையினரும் தவறாமல் பார்வையிட்டு, சர்வதேச அளவிலான புதிய தொழில்நுட்பங்கள் குறித்து தெரிந்துகொள்ளவேண்டும். தொழில்துறையினரின் வசதிக்காக, திருப்பூரிலிருந்து கண்காட்சி நடைபெறும் ஹைடெக் வளாகம் வரை, இலவச வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு, அவர் கூறினார். ஹைடெக் இன்டர்நேஷனல் நிர்வாக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி உடனிருந்தார்.
கண்காட்சியை பார்வையிட விரும்புவோர், www.knittech.asia என்கிற இணையதளத்தில் முன்பதிவு செய்துகொள்ளவேண்டும்.