/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பின்னலாடை தலைநகர் சாதனை! கடந்தாண்டிலும் ஏற்றுமதியில் முன்னிலை தேச வளர்ச்சிக்கு என்றும் உறுதுணை
/
பின்னலாடை தலைநகர் சாதனை! கடந்தாண்டிலும் ஏற்றுமதியில் முன்னிலை தேச வளர்ச்சிக்கு என்றும் உறுதுணை
பின்னலாடை தலைநகர் சாதனை! கடந்தாண்டிலும் ஏற்றுமதியில் முன்னிலை தேச வளர்ச்சிக்கு என்றும் உறுதுணை
பின்னலாடை தலைநகர் சாதனை! கடந்தாண்டிலும் ஏற்றுமதியில் முன்னிலை தேச வளர்ச்சிக்கு என்றும் உறுதுணை
ADDED : பிப் 13, 2024 12:31 AM

திருப்பூர்:தேசத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக விளங்கும் திருப்பூரின் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகப் பங்களிப்பு, சவாலான காலத்திலும், உறுதியான நிலையில் தொடர்கிறது. கடந்தாண்டு, நாட்டின் மொத்த பின்னலாடை ஏற்றுமதியில் திருப்பூரின் பங்களிப்பு 55 சதவீதமாக இருந்தது.
திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம், அமெரிக்கா, ஐரோப்பா, பிரிட்டன் நாடுகளையே, 70 சதவீதம் சார்ந்துள்ளது. கடந்த 2022 முதல், பின்னலாடை தொழில் பல்வேறு சவால்களை சந்தித்து வருகிறது. அபரிமிதமான பஞ்சு விலை உயர்வு, அதன் தொடர்ச்சியாக நுால் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு என, அடுத்தடுத்த பிரச்னைகளால், நெருக்கடி நிலைக்கு உள்ளானது.
வர்த்தக வளர்ச்சி குறைந்தது
ரஷ்யா - உக்ரைன் போர் சூழல் காரணமாக, வளர்ந்த நாடுகளும் சிக்கன நடவடிக்கையை கையாண்டதால், ஆடைக்கான தேவை சற்று குறைந்தது. இதனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக, திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகத்தில் வளர்ச்சி ஏற்படவில்லை.
பல கட்ட சோதனைகளையும் கடந்து, மத்திய, மாநில அரசு உதவிகளுடன், சர்வதேச சந்தையில், இந்திய ஏற்றுமதியாளர்கள் போட்டிகளை 'எதிர் நீச்சல்' போட்டு சமாளித்தனர்.
வளர்ந்த நாடுகளில், பண வீக்கம் மறைந்து வருவதால், திருப்பூருக்கான பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகமும், படிப்படியாக உயர்ந்து வருகிறது.
இயல்பு நிலைதிரும்புகிறது
கடந்த ஆண்டு ஜன., மாதம், திருப்பூரின் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம், 2,782 கோடி ரூபாயாக இருந்தது. பிப்., மாதம், 2,505 கோடியாக குறைந்தது. நிதியாண்டு நிறைவடையும் மார்ச் மாதம், 2,966 கோடியாக உயர்ந்தது.
ஏப்., மாதம் நடந்த ஏற்றுமதி, 2,376 கோடி ரூபாயாக குறைந்தது. மே மாதம் - 2,659 கோடி ரூபாய், ஜூன் மாதம் -2,769 கோடி, ஜூலை மாதம் - 2,641 கோடி, ஆக., மாதம் -2,640 கோடி, செப்., மாதம், 2,247 கோடியாக வர்த்தகம் சரிந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக, கடந்தாண்டு அக்., மாதம், 2,152 கோடியாக சரிந்தது.
வளர்ந்த நாடுகளில், கடந்த ஆண்டு ஆக., மாதத்துக்கு பிறகு, நிலைமை சீரானது; பிறகு வந்த, புதிய வர்த்தக விசாரணைகள் ஆர்டராக மாற்றப்பட்டது. இதனால் மீண்டும் ஏற்றுமதி உயரத்துவங்கியது. அதன்படி, நவ., மாதம், 2,312 கோடி ரூபாயாக இருந்த ஏற்றுமதி வர்த்தகம், டிச., மாதம், 2,804 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
கடந்த 2023ல், நாட்டின் மொத்த பின்னலாடை ஏற்றுமதி, 56 ஆயிரத்து, 221 கோடியாக இருந்தது; திருப்பூரின் பங்களிப்பு, 30 ஆயிரத்து, 853 கோடி ரூபாயாக இருந்தது. நம் நாட்டின் பின்னலாடை ஏற்றுமதியில் திருப்பூரின் பங்களிப்பு 55 சதவீதமாக உள்ளது.
கடந்தாண்டில்...
திருப்பூரில் இருந்து
கடந்தாண்டு பின்னலாடை ஏற்றுமதி மாதம் - ரூபாய்
(கோடியில்)
ஜன., - 2782
பிப்., - 2505
மார்ச் - 2966
ஏப்., - 2376
மே - 2659
ஜூன் - 2769
ஜூலை - 2641
ஆக., - 2640
செப்., - 2247
அக்., - 2152
நவ., - 2312
டிச., - 2804
--------------
மொத்தம் - 30,853