/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பின்னலாடை நிறுவனங்கள் இன்று முதல் வேகமெடுக்கும்
/
பின்னலாடை நிறுவனங்கள் இன்று முதல் வேகமெடுக்கும்
ADDED : அக் 26, 2025 10:18 PM
திருப்பூர்: தீபாவளி பண்டிகை கொண்டாட்டம் முடிந்து, இன்று முதல் பனியன் நிறுவனங்களும், 'ஜாப் ஒர்க்' நிறுவனங்களும் வழக்கமான இயக்கத்துக்கு திரும்புகின்றன.
திருப்பூரில் 1,500க்கும் அதிகமான ஏற்றுமதி நிறுவனங்கள், 2,500க்கும் அதிகமான உள்நாட்டு பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள், 350 சாய ஆலைகள், 18 பொது சுத்திகரிப்பு நிலையங்கள், நுாற்றுக்கும் அதிகமான தனியார் சுத்திகரிப்பு நிலையத்துடன் கூடிய சாய ஆலைகள், 300க்கும் அதிகமான பிரின்டிங் நிறுவனங்கள்; நுாற்றுக்கும் அதிகமான கம்ப்யூட்டர் எம்ப்ராய்டரிங் நிறுவனங்கள், காம்பாக்டிங், ரைசிங், எலாஸ்டிக் உற்பத்தி மற்றும் விற்பனை நிலையங்கள் என, ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் இயங்குகின்றன. மொத்தம், எட்டு லட்சம் தொழிலாளர், நேரடியாகவும், மறைமுகமாகவும் பணியாற்றி வருகின்றனர்.
தீபாவளி பண்டிகைக்காக, திருப்பூரில் இயங்கும் நிறுவனங்களுக்கு, 18ம் தேதி முதல் விடுமுறை அளிக்கப்பட்டது. உள்ளூர் தொழிலாளர் மற்றும் வடமாநில தொழிலாளர்கள் வாயிலாக, 23ம் தேதி முதல் பனியன் நிறுவனங்கள், 30 சதவீதம் அளவுக்கு இயங்க துவங்கின.
சொந்த ஊர்களுக்கு சென்றிருந்த வெளிமாவட்ட தொழிலாளர் குடும்பங்கள், முழுமையாக திருப்பூர் திரும்பிவிட்டன. இன்று முதல், வழக்கம் போல் தொழிலாளர்கள் பணிக்கு திரும்ப உள்ளனர். இதனால், திருப்பூர் மீண்டும் வழக்கமான பரபரப்புக்கு மாறிவிடும். அனைத்து வணிக வளாகங்கள், கடைகளும் இன்று முதல் முழு இயக்கத்துக்கு வர உள்ளன.

