/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் மகிழ்ச்சி! ஏற்றுமதியில் மகத்தான சாதனை; அடுத்த இலக்குக்கு தயாராகின்றனர்
/
பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் மகிழ்ச்சி! ஏற்றுமதியில் மகத்தான சாதனை; அடுத்த இலக்குக்கு தயாராகின்றனர்
பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் மகிழ்ச்சி! ஏற்றுமதியில் மகத்தான சாதனை; அடுத்த இலக்குக்கு தயாராகின்றனர்
பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் மகிழ்ச்சி! ஏற்றுமதியில் மகத்தான சாதனை; அடுத்த இலக்குக்கு தயாராகின்றனர்
ADDED : ஏப் 16, 2025 11:02 PM

திருப்பூர் : திருப்பூர் பின்னலாடை மற்றும் ஆயத்த ஆடை ஏற்றுமதி 40 ஆயிரம் கோடி ரூபாய் என்ற புதிய மைல்கல்லை எட்டியுள்ளதால், ஏற்றுமதியாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கடந்தாண்டு துவக்கத்தில் இருந்தே, புதிய வாய்ப்புகள் வரத்துவங்கியதால், திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம், 2024-25ம் நிதியாண்டில் 40 ஆயிரம் கோடி ரூபாயை எட்டும் என, பின்னலாடை துறையினர் நம்பிக்கை தெரிவித்தனர். மத்திய வர்த்தகத்துறை அமைச்சகம், கடந்த நிதியாண்டில், 1.35 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக, நம் நாட்டில் ஆயத்த ஆடை ஏற்றுமதி நடந்துள்ளதாக அறிவித்துள்ளது. திருப்பூர் பின்னலாடை மற்றும் ஆயத்த ஆடை ஏற்றுமதியும், 40 ஆயிரம் கோடி ரூபாய் என்ற இலக்கை அடைந்துள்ளதாக, தொழில்துறையினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
2030ல் ரூ.1 லட்சம் கோடி
சுப்பிரமணியன், தலைவர், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம்:
திருப்பூரின் ஏற்றுமதி வர்த்தகம், 10 சதவீதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்த்தோம்; ஆனால், சாதகமான சூழலை சரியாக பயன்படுத்திக்கொண்டதால், 20 சதவீத வளர்ச்சி கிடைத்துள்ளது. நீண்ட காலம் எதிர்பார்த்தபடி, 40 ஆயிரம் கோடி ரூபாய் என்ற இலக்கை எட்டியுள்ளோம். இனிவரும் நாட்களிலும், ஆண்டுக்கு, 10 சதவீதம் என்ற வளர்ச்சி இலக்குடன் பயணிப்போம். வரும், 2030ல், ஒரு லட்சம் கோடி ரூபாய் ஏற்றுமதி என்ற இலக்கையும் நிச்சயம் சென்றடைவோம்.
சாதனையாகமாறிய சவால்
இளங்கோவன், தலைவர், அனைத்து ஜவுளி ஏற்றுமதி முகமைகள் கூட்டமைப்பு:
சர்வதேச அளவில், சாதகமான சூழல் நிலவுவதால், திருப்பூரின் தற்போதைய குறிக்கோள், ஒரு லட்சம் கோடி ரூபாய் ஏற்றுமதி; அதற்கான முதல்படியாக, 40 ஆயிரம் கோடி ரூபாய் என்ற இலக்கை எட்டியுள்ளோம். வரும், 2030ம் ஆண்டுக்குள், நிச்சயமாக 50 ஆயிரம் கோடியை தாண்டி, ஒரு லட்சம் கோடி ரூபாய் ஏற்றுமதி என்ற நிலையை அடைய முயற்சிப்போம். சவால்களை சாதனையாக மாற்றி, திருப்பூர் ஏற்றுமதியாளர்களின் விடாமுயற்சியால், 20 சதவீத வளர்ச்சியை ஈட்டியது பிரமிக்க வைக்கிறது. அமெரிக்க வர்த்தகர்களின் விசாரணையும் சாதகமாக மாறியுள்ளது.
ஒருங்கிணைந்தால் வெற்றி
முத்துரத்தினம், தலைவர், திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்கம் (டீமா):
ஏற்றுமதி, 40 ஆயிரம் கோடி ரூபாயை எட்டியது மகிழ்ச்சி; அமெரிக்க வரிவிதிப்பால், இந்தியாவுக்கு சாதகமான சூழல் நிலவுகிறது; நமது போட்டி நாடுகள் இடையே வர்த்தக போர் நடக்கிறது.
ஒருங்கிணைந்து செயல்பட்டால், ஒரு லட்சம் கோடி ரூபாய் ஏற்றுமதியை விரைவில் எட்ட, 100 சதவீதம் வாய்ப்புள்ளது. மத்திய, மாநில அரசுகள், தொழில்துறையினரின் கோரிக்கையை கேட்டறிந்து, நிறைவேற்றி கொடுக்க வேண்டும். திருப்பூரின் குறு, சிறு ஏற்றுமதியாளர்களின் கோரிக்கையை, மத்திய அரசு பூர்த்தி செய்ய வேண்டும். தமிழக அரசு, மின் கட்டண சுமையை குறைக்க வேண்டும்.