/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பின்னலாடை உற்பத்தி 20% அதிகரிக்கும் கைகொடுக்க காத்திருக்கும் நவீன தொழில்நுட்பங்கள்: தொழில்துறையினரிடம் நம்பிக்கை மலர்கிறது
/
பின்னலாடை உற்பத்தி 20% அதிகரிக்கும் கைகொடுக்க காத்திருக்கும் நவீன தொழில்நுட்பங்கள்: தொழில்துறையினரிடம் நம்பிக்கை மலர்கிறது
பின்னலாடை உற்பத்தி 20% அதிகரிக்கும் கைகொடுக்க காத்திருக்கும் நவீன தொழில்நுட்பங்கள்: தொழில்துறையினரிடம் நம்பிக்கை மலர்கிறது
பின்னலாடை உற்பத்தி 20% அதிகரிக்கும் கைகொடுக்க காத்திருக்கும் நவீன தொழில்நுட்பங்கள்: தொழில்துறையினரிடம் நம்பிக்கை மலர்கிறது
UPDATED : ஆக 09, 2025 08:43 AM
ADDED : ஆக 08, 2025 11:52 PM

திருப்பூர்: திருப்பூரில் நேற்று துவங்கிய 'நிட்ேஷா' கண்காட்சி, அதிநவீன பின்னலாடை உற்பத்தி மற்றும் அது சார்ந்த இயந்திரங்களின் அணிவகுப்பாக காட்சியளிக்கிறது. ''நவீனத்தொழில்நுட்பங்கள் தொழில்துறையினருக்கு நம்பிக்கையைத் தருகின்றன; திருப்பூரின் பின்னலாடை உற்பத்தித்திறன் 20 சதவீதம் உயரும்'' என்று ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் துணைத்தலைவர் சக்திவேல் உறுதிபடக் கூறினார்.
திருப்பூர் காங்கயம் ரோடு, 'டாப்லைட்' மைதானத்தில், 23வது 'நிட்ேஷா' கண்காட்சி நேற்று துவங்கியது. 'மேக் இன் இந்தியா' திட்டத்தில் உருவாக்கப்பட்ட பிரின்டிங் இயந்திரங்கள் உள்ளிட்ட பின்னலாடை உற்பத்தி இயந்திரங்கள் இடம்பெற்றுள்ளன. தொழில்துறையினர் கூட்டாக சென்று, கண்காட்சியை பார்வையிட்டனர். புதிய மெஷின்களின் விவரங்களை கேட்டறிந்தனர்.
ஒரே கூரையின் கீழ் நவீன இயந்திரங்கள்
சக்திவேல், துணைத்தலைவர், ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் - ஏ.இ.பி.சி.,:
நம் நாட்டில் இதுவரை இல்லாத அளவு, 'நிட்ேஷா' கண்காட்சி பிராண்டமாக நடந்து கொண்டிருக்கிறது. ஒரு ஸ்டாலில் கூட பழைய மெஷின்களை காணவில்லை; உற்பத்தி மேம்பாட்டு இயந்திரம், அதிவேக மெஷின்கள் வந்துள்ளன. புதிய தொழில்நுட்ப மெஷின்கள் அதிகம் இடம்பெற்றுள்ளன.
வரும், 2026ல், அறிமுகமாகும் இயந்திரங்கள் கூட, கண்காட்சிக்கு வந்துள்ளன. வெளிநாடுகளுக்கு செல்லாமல், ஒரே இடத்தில் அனைத்து நிறுவனங்களையும் சந்திப்பது, அதிகம் பயனளிக்கும். பின்னலாடை தொழிலுக்கு தேவையான அனைத்து மெஷின்களும், தொழில்நுட்பமும், இக்கண்காட்சியில் நிரம்பியுள்ளன. ஐரோப்பா மற்றும் பிரிட்டன் வர்த்தக ஒப்பந்தத்தால் வரும் கூடுதல் ஆர்டர்களையும் திருப்பூர் ஏற்று செயல்பட முடியும்;
திருப்பூரின் பின்னலாடை உற்பத்தி திறன், 20 சதவீதம் நிச்சயம் அதிகரிக்கும், என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.
நிரந்தர கண்காட்சி மையம் அவசியம்
ஈஸ்வரன், தலைவர், தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்கம்(சைமா):
பின்னலாடை தொழிலுக்கு வரப்பிரசாதம் போல், நவீன இயந்திரங்களுடன் கண்காட்சி நடந்து வருகிறது. எதிர்கால வளர்ச்சிக்கு உறுதுணையாக, உற்பத்தி இயந்திரங்கள் வந்துள்ளன. நிறுவனங்களில் புதுமையை புகுத்த வேண்டும்; புதிய தொழில்நுட்பத்தால், பின்னலாடை தொழில் புத்தாக்கம் பெறும்.
வெளிநாட்டு வர்த்தகர்கள் வந்து செல்லும் திருப்பூரில், நிரந்தர கண்காட்சி மையம் இல்லாதது வருத்தம் அளிக்கிறது. தொழில்துறையினர் கூட்டாக இணைந்து, உலகமே திரும்பி பார்க்கும் திருப்பூரில், நிரந்தர கண்காட்சி மையம் அமைக்கப்பட வேண்டும். மத்திய, மாநில அரசுகளின் உதவியுடன், கண்காட்சி மையம் அமைக்க, 'சைமா' பலமுறை கோரிக்கை விடுத்துள்ளது. கோவை கொடீசியா போல், திருப்பூரில் கண்காட்சி மையம் அமைய, ஏ.இ.பி.சி., துணை தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
என்ன தேவையோ அது வந்தது
ஸ்ரீகாந்த், தலைவர், திருப்பூர் 'நிட்வேர் பிரின்டர்ஸ்' அசோசியேஷன் (டெக்பா):
கடந்தாண்டு கூறியதுபோல், இக்கண்காட்சியில், 'ஏ.ஐ.,' தொழில்நுட்ப இயந்திரங்கள் வந்துள்ளன. மாற்றம் ஒன்றுதான் மாறாதது. 1970ல் 'ரப்பர் ஸ்டாம்ப்' பிரின்ட் இருந்தது; 1980 முதல், 2000 டேபிள் பிரின்ட், 20000 -2010 வரை, 'மேனுவல் பிரின்ட்' இருந்தது.
கடந்த, 2010க்கு பிறகு, 'ஆட்டோமேஷன்' பிரின்டிங் இயந்திரங்கள் வந்துள்ளன. திருப்பூருக்கு எந்த நேரத்தில் என்ன தேவை என அறிந்து, கண்காட்சியில் வந்து சேர்கிறது. நிறைவாக, டிஜிட்டல் தொழில்நுட்பம் வந்துள்ளது. ஆட்கள் பற்றாக்குறையை சமாளிக்க, 'ரோபோ' பயன்பாட்டை துவங்கியுள்ளோம். ஏற்றுமதி வர்த்தகம் ஒரு லட்சம் கோடி ரூபாயை எட்ட, பிரின்டிங் துறை மேம்பட வேண்டும்.
வெளிநாடுகளுக்கு சென்று கண்காட்சியை பார்த்து வந்தவர்களுக்கு, திருப்பூரில் ஒரே கூரையின் கீழ் வெளிநாட்டு இயந்திரங்கள் கண்காட்சி நடப்பது அதிக பயனளிக்கிறது. தொழில்நுட்ப வளர்ச்சியை அறிய கண்காட்சி உதவுகிறது. .
தொழில்துறையினர் பார்வையிட வேண்டும்
விவேகானந்தன், தலைவர், தென்னிந்திய இறக்குமதி இயந்திர பின்னல் துணி உற்பத்தியாளர்கள் (சிம்கா): 'நிட்டிங் முதல், பேக்கிங்' வரை அனைத்து தறைகளுக்கு நவீன இயந்திரங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இக்காலத்துக்கு ஏற்ற மெஷின்கள் வந்து சேர்ந்துள்ளன. அனைத்து உப பொருட்களும் ஸ்டாலில் வைக்கப்பட்டுள்ளது பயனுள்ளதாக இருக்கும். கண்டிப்பாக பார்வையிட வேண்டும்.
மணி, தலைவர், திருப்பூர் தொழில் கூட்டமைப்பு ( டிப்):
கண்காட்சி பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது; ஜாப் ஒர்க்' நிறுவனங்களுக்கான இயந்திரங்களும், உதிரி பாகங்களும் அதிகம் கிடைக்கும். அமெரிக்க ஆர்டர் பாதிக்குமா என்ற அச்சம் இருந்தது; மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு ஏற்படுத்த வேண்டும்.
நாகேஷ், தலைவர், திருப்பூர் சாயம் மற்றும் கெமிக்கல் வியாபாரிகள் சங்கம்:
கண்காட்சியில், பிரின்டிங் துறை மெஷின்கள் அதிகம் உள்ளன. 'ரோபோ' மெஷின்கள் வந்துள்ளது, ஆட்கள் பற்றாக்குறையை சமாளிக்க உதவும். தொழிலில் ஏற்ற இறக்கம் வந்தாலும், புதிய தொழில்நுட்பங்கள் வளர்ச்சிக்கு வழிகாட்டியாக இருக்கும்.
---
திருப்பூர், காங்கயம் ரோடு, 'டாப்லைட்' வளாகத்தில் 'நிட் ஷோ' பின்னலாடை இயந்திரக் கண்காட்சி நடந்தது. ஏ.இ.பி.சி., துணைத்தலைவர் சக்திவேல் ரிப்பன் வெட்டி திறந்துவைத்தார். அருகில் (இடமிருந்து) 'டிப்' தலைவர் மணி, 'டெக்பா' தலைவர் ஸ்ரீகாந்த், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பரமணியன், சைமா தலைவர் ஈஸ்வரன், கண்காட்சி ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணா உள்ளிட்டோர்.