/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திறமையை அறிந்து கொண்டு சாதிக்க வேண்டும்! மாணவர்களுக்கு டி.ஐ.ஜி., அறிவுறுத்தல்
/
திறமையை அறிந்து கொண்டு சாதிக்க வேண்டும்! மாணவர்களுக்கு டி.ஐ.ஜி., அறிவுறுத்தல்
திறமையை அறிந்து கொண்டு சாதிக்க வேண்டும்! மாணவர்களுக்கு டி.ஐ.ஜி., அறிவுறுத்தல்
திறமையை அறிந்து கொண்டு சாதிக்க வேண்டும்! மாணவர்களுக்கு டி.ஐ.ஜி., அறிவுறுத்தல்
ADDED : ஜன 12, 2025 02:10 AM

அவிநாசி: அவிநாசி, ஆட்டையாம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ செந்துார் மஹாலில் திருப்பூர் ஸ்ரீ விவேகானந்தா சேவாலயத்தின் சார்பில் சுவாமி விவேகானந்தரின் 163வது ஜெயந்தி விழா மற்றும் தேசிய இளைஞர் தின விழா நடைபெற்றது.
திருவண்ணாமலை ஸ்ரீராமகிருஷ்ண ஆசிரமம் ஸ்ரீமத் சுவாமி விமூர்த்தானந்தர், தஞ்சாவூர் ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் தலைவர் மாத்ருசேவானந்தர் ஆசியுரையுடன் விழா துவங்கியது.
ஸ்ரீ விவேகானந்தா சேவாலய நிறுவனர் செந்தில்நாதன் வரவேற்றார். விகாஸ் வித்யாலயா கல்விக்குழுமங்களின் தலைவர் ஆண்டவர் ராமசாமி, பண்டிட் அசோக் பாரதி உட்பட பலர் பேசினர்.பல்வேறு பள்ளிகளில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற டி.ஐ.ஜி, திருநாவுக்கரசு, 'தன்னிலை உயர்த்து,' என்ற தலைப்பில், பேசியதாவது:
மாணவ, மாணவியர், முதலில் தங்களை யார் என்று உணர வேண்டும். தங்களது வலிமை, திறமை, ஆற்றல் என்னவென்பதை அறிந்து கொள்ள வேண் டும். ஒவ்வொருவரும் திறமையாளர்கள், சாதனையாளர்கள் தான்.
தன்னை அறிந்துக் கொண்டால் இந்த திறமையும், சாதனையும் வெளியே வரும் என்பதை உணர்த்துவது தான், சுவாமி விவேகானந்தர் நாள் உணர்த்தும் உண்மை.
கல்வி, விளையாட்டு என, மாணவர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்குள் உள்ள திறமையை அறிந்து, அதில் சாதிக்க வேண்டும்.
பிரச்னைகளை எதிர்கொள்ளும் மனநிலையை வளர்த்துக் கொள்ள வேண்டும். பிரச்னைகளை கண்டு ஓடினால், பிரச்னை நம்மை துரத்தும்; பிரச்னைகளை எதிர்த்து நின்றால், பிரச்னை நம்மை விட்டு ஓடும் என்பதும், விவேகானந்தர் கற்றுக் கொடுத்த பாடம் தான். மாணவ, மாணவியர் ஒவ்வொருவரும் தாங்கள் செய்யும் தவறை அறிந்து, அதை சரி செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.
தொடர்ந்து, 'வார்த்தை ஒரு வரம்' என்ற தலைப்பில் லாவண்யா சோபனா சிறப்புரையாற்றினர்.
அசோக்குமார் நன்றி கூறினார்.