ADDED : நவ 14, 2024 11:34 PM

திருப்பூர் ; குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில்,விழிப்புணர்வு ஊர்வலம், திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று நடைபெற்றது.
இதனை, டி.ஆர்.ஓ., கார்த்திகேயன், கொடியசைத்து துவக்கிவைத்தார். 'குழந்தை தொழிலாளர் குற்றம் அதிகரிக்க மாட்டோம்', 'குழந்தை உரிமையும் மனித உரிமையே', 'குழந்தை திருமணத்தை தடுப்போம்' என்பன உள்பட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு, அங்கன்வாடி பணியாளர்கள், கல்லுாரி மாணவியர் ஊர்வலமாக சென்றனர்; கலெக்டர் அலுவலக வளாகத்தில் துவங்கிய ஊர்வலம், தென்னம்பாளையம் வரை சென்று, கலெக்டர் அலுவலக வளாகத்துக்கு திரும்பியது.
குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நாடகம் நடத்தப்பட்டது. கையெழுத்து இயக்கத்தில், குழந்தைகளை பாதுகாப்போம் என உறுதி மொழி அளித்து, அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கையெழுத்திட்டனர். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ரியாஸ் அகமது பாஷா, சமூக நல அலுவலர் ரஞ்சிதாதேவி உள்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.