/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆல்கொண்டமால் கோவிலில் கோசாலை; பக்தர்களின் கோரிக்கை நிறைவேறுமா?
/
ஆல்கொண்டமால் கோவிலில் கோசாலை; பக்தர்களின் கோரிக்கை நிறைவேறுமா?
ஆல்கொண்டமால் கோவிலில் கோசாலை; பக்தர்களின் கோரிக்கை நிறைவேறுமா?
ஆல்கொண்டமால் கோவிலில் கோசாலை; பக்தர்களின் கோரிக்கை நிறைவேறுமா?
ADDED : நவ 05, 2024 08:51 PM
உடுமலை ; ஆல்கொண்டமால் கோவிலுக்கு, ஆண்டுதோறும் பக்தர்கள் காணிக்கையாக வழங்கும் கால்நடைகளை பராமரிக்க, ஹிந்து அறநிலையத்துறை சார்பில், கோசாலை துவக்க வேண்டும் என்ற கோரிக்கை, நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.
உடுமலை சோமவாரப்பட்டியில், பிரசித்தி பெற்ற ஆல்கொண்டமால் கோவில் உள்ளது. கால்நடைகளுக்கு ஏற்படும் பிரச்னைகளுக்கு உருவாரங்களை வைத்து, இக்கோவிலில், சுற்றுப்பகுதி பக்தர்கள் வழிபடுகின்றனர்.
பொங்கலன்று துவங்கி, மூன்று நாட்கள் நடக்கும் திருவிழாவில், அருகிலுள்ள கிராமங்களில், வளர்க்கப்படும் சலகெருதுகள் கோவில் வளாகத்திற்கு வரவழைக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன.
சிறப்பம்சமாக, பொங்கலன்று கால்நடைகள் ஈன்றெடுக்கும் கன்றுகள், ஆல்கொண்டமாலனுக்கு சொந்தம் என்ற நம்பிக்கை அப்பகுதி மக்களிடையே உள்ளது.
இதனால், ஆண்டுதோறும் பொங்கலையொட்டி நடக்கும் திருவிழாவில், கன்றுகளை தானமாக அளிக்கின்றனர். மேலும், கால்நடை வளம் பெருக, ஆடு, சேவல் ஆகியவற்றையும் கோவிலுக்கு வழங்கும் பழக்கமும் உள்ளது.
இவ்வாறு, கோவிலுக்கு வழங்கப்படும் கால்நடைகளை ஹிந்து அறநிலையத்துறையினர், இரண்டு நாட்கள் கோவிலில் வைத்து பராமரித்த பின்னர், பிற மாவட்டங்களிலுள்ள கோசாலைக்கு அனுப்புகின்றனர்.
இச்செலவிற்காக தானம் வழங்கும் பக்தர்களிடம், ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
கட்டண முறையால், பாதிக்கப்படும் பக்தர்கள், கன்றுகளை விலைக்கு விற்று, அதில் கிடைக்கும் தொகையை கோவில் உண்டியலில் செலுத்துகின்றனர். ஆண்டுதோறும் சராசரியாக 50க்கும் மேற்பட்ட கால்நடைகள் தானமாக வழங்கப்படுகின்றன.
கால்நடைகளுக்கென பிரசித்தி பெற்ற கோவிலுக்கு வழங்கப்படும் கன்றுகளை, அங்கேயே பராமரிக்க வேண்டும் என்ற கோரிக்கை, பல ஆண்டுகளாக உள்ளது.
இதற்காக ஹிந்து அறநிலையத்துறையினர் கோவில் அருகில், கோசாலையை துவக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பக்தர்கள் அரசுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில், 'ஆல்கொண்டமால் கோவிலுக்கு வழங்கப்படும் கன்றுகளை கோவில் அருகிலேயே வைத்து பராமரிக்க கோசாலை அமைக்க வேண்டும். தானமாக வழங்கப்படும் கால்நடைகளை பராமரித்து வளர்க்க தேவையான தீவனப்புல், தண்ணீர் ஆகியவற்றை கோவிலுக்கு சொந்தமான நிலத்தில், எளிதாக பெற முடியும்'.
'கால்நடைகளுக்கென பிரத்யேகமான கோவிலில், கோசாலை அமைப்பது அக்கோவிலின் சிறப்பை மேலும் அதிகரிக்கும். இது குறித்து நீண்ட காலமாக அரசுக்கு மனு அனுப்பி வருகிறோம்', என்றனர்.

