/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஸ்ரீஅங்காளம்மன் கோவிலுக்கு ஜூன் 6ல் கும்பாபிேஷகம்
/
ஸ்ரீஅங்காளம்மன் கோவிலுக்கு ஜூன் 6ல் கும்பாபிேஷகம்
ADDED : மே 27, 2025 11:41 PM

திருப்பூர் ; திருப்பூரை சேர்ந்த பல்வேறு சமுதாய மக்களும் குலதெய்வமாக வழிபட்டு வரும், முத்தணம்பாளையம் ஸ்ரீஅங்காளம்மன் கோவில் கும்பாபிேஷகம், வரும் 6ம் தேதி கோலாகலமாக நடைபெற உள்ளது.
பழமையான, இக்கோவிலில், மூன்று நிலை கொண்ட புதிய ராஜகோபுரம் உள்ளிட்ட திருப்பணிகள் நடந்து வந்தன. பணிகள் நிறைவடைந்து, கும்பாபிேஷகம், வரும் ஜூன் 6ம் தேதி விமரிசையாக நடைபெற உள்ளது. கருவறை விமானத்தில், தங்க கவசம் பொருத்தப்பட உள்ளது.
கும்பாபிேஷக விழா, வரும் ஜூன் 1ல் மங்கள இசை, விநாயகர் வழிபாட்டுடன் துவங்குகிறது; 2ம் தேதி மாலை 4:00 மணிக்கு கோவில்வழி சின்னம்மன் மற்றும் பெரிய அழகுநாச்சியம்மன் கோவிலில் இருந்து முளைப்பாரி ஊர்வலம் மேளதாளத்துடன் நடைபெறும். 3ம் தேதி முதல் தினமும் காலை, மாலை, யாகசாலை வேள்வி பூஜை, வேதமந்திரங்கள் முழங்க நடக்கிறது.
வரும், 6ம் தேதி காலை, ஆறாம் கால வேள்வி பூஜையை தொடர்ந்து, காலை, 5:30 மணிக்கு, ராஜகோபுரம் மற்றும் அனைத்து மூலமூர்த்திகள் விமான கலசங்களுக்கு கும்பாபிேஷகம்; காலை, 6:00 மணிக்கு, அங்காளம்மன் மற்றும் பரிவார தெய்வங்கள் கும்பாபிேஷகம் நடைபெற உள்ளது. மகா அபிேஷகம், தசதானம், தசதரிசனம், கோபூஜையும் நடைபெறும். காலை 6:00 மணி முதல் அன்னதானம் வழங்கப்படும். அன்று மாலை, 6:00 மணிக்கு, அம்மன் திருவீதியுலா நிகழ்ச்சி நடக்கிறது.
கும்பாபிேஷக விழா ஏற்பாடுகளை, அறங்காவலர் குழுவினர் மற்றும் அனைத்து சமுதாய மக்கள் அடங்கிய திருப்பணிக்குழுவினர் செய்து வருகின்றனர்.
கலைநிகழ்ச்சிகள்
கும்பாபிேஷக விழாவையொட்டி, 1ம் தேதி கும்மியாட்டம்; 2ம் தேதி கரகாட்டம், ஒயிலாட்டம், காவடியாட்டம்; 3ம் தேதி வள்ளிகும்மி ஆட்டம், 4ம் தேதி கும்மி ஆட்டம், 5ம் தேதி பாரம்பரிய வள்ளி கும்மி ஆட்டம் ஆகிய கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.