/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குறுவை சிறப்பு தொகுப்பு திட்டம்; நெல் விவசாயிகளுக்கு அழைப்பு
/
குறுவை சிறப்பு தொகுப்பு திட்டம்; நெல் விவசாயிகளுக்கு அழைப்பு
குறுவை சிறப்பு தொகுப்பு திட்டம்; நெல் விவசாயிகளுக்கு அழைப்பு
குறுவை சிறப்பு தொகுப்பு திட்டம்; நெல் விவசாயிகளுக்கு அழைப்பு
ADDED : ஜூன் 16, 2025 08:31 PM
உடுமலை; 'குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தின் கீழ், நெல் விதை உள்ளிட்ட மானிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது; தேவைப்படும் விவசாயிகள் அணுகலாம்,' என மடத்துக்குளம் வட்டார வேளாண்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மடத்துக்குளம் சுற்றுப்பகுதியில், அமராவதி ஆற்றுப்பாசனத்துக்கு, பரவலாக நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இந்தாண்டு அப்பகுதி விவசாயிகளுக்காக குறுவை சிறப்பு தொகுப்பு திட்டம், மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படுகிறது. மடத்துக்குளம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் வசந்தா கூறியிருப்பதாவது: டெல்டா அல்லாத மாவட்டங்களிலும், இந்தாண்டு, குறுவை சிறப்பு தொகுப்பு திட்டம் அரசால் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
திட்டத்தின் கீழ், மானிய விலையில் நெல் சான்று விதைகள், உயிர் உரங்கள், நுண்ணுாட்டக் கலவை மற்றும் இயந்திர நடவை ஊக்கப்படுத்த மானியம், திருப்பூர் மாவட்டத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மடத்துக்குளம் வட்டாரத்தில், 66 ஏக்கர் (பொது) ஆதிதிராவிட விவசாயிகள் 9 ஏக்கர் என மொத்தம் 75 ஏக்கருக்கு நெல் இயந்திர நடவுக்கு, ஆகும் செலவினம், 8 ஆயிரம் ரூபாயில், ஏக்கருக்கு, 4 ஆயிரம் ரூபாய் வீதம் மானியம் வழங்கப்படுகிறது.
கோ-55 நெல் விதை, மானிய விலையாக கிலோ 20 ரூபாய்க்கு வினியோகம் செய்யப்படும். இதற்காக, 3 ஆயிரத்து 500 கிலோ விதை இருப்பு செய்யப்பட்டுள்ளது. கோ--55 ரகம், தமிழ்நாடு வேளாண் பல்கலை.,யால், 2022ல், அறிமுகப்படுத்தப்பட்ட புதிய ரகமாகும். தமிழகத்தில் சொர்ணவாரி, கார், குறுவை, நவரைப்பருவத்தில் சாகுபடி செய்வதற்கு உகந்த சன்னரக நெல் கோ-55 ஆகும். இதன் வயது, 115 நாட்களாகும்.
ெஹக்டேருக்கு, 6,050 கிலோ மகசூல் தரும். நெல் 'துங்குரோ' நோய்க்கு மிதமான எதிர்ப்புத்திறன் கொண்டது.மேலும் மண் வளம், உற்பத்தியை ஊக்கப்படுத்த, மானிய விலையில் திரவ உயிர் உரங்கள் மற்றும் நுண்ணுாட்டக்கலவை (அடியுரம்),ஏக்கருக்கு, 5 கிலோ வீதம் 2.5 ஏக்கர் வரை, மானிய விலையில் வினியோகம் செய்ய இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
நுண்ணுாட்டங்கள் பயன்படுத்தும் போது நெல்லில் சுமார் 15 சதவீத கூடுதல் மகசூல் கிடைக்கும். எனவே இந்த மானிய திட்டத்தை, மடத்துக்குளம் வட்டார விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். மேலும், விபரங்களுக்கு மடத்துக்குளம் வட்டார வேளாண் விரிவாக்க மையத்தை அணுகலாம். இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.