/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திறப்பு விழாவுக்கு காத்திருக்கும் தொழிலாளர் துறை அலுவலகம்
/
திறப்பு விழாவுக்கு காத்திருக்கும் தொழிலாளர் துறை அலுவலகம்
திறப்பு விழாவுக்கு காத்திருக்கும் தொழிலாளர் துறை அலுவலகம்
திறப்பு விழாவுக்கு காத்திருக்கும் தொழிலாளர் துறை அலுவலகம்
ADDED : மார் 20, 2025 02:49 AM

திருப்பூர், மார்ச் 20-
திருப்பூர், அவிநாசி ரோடு, குமார் நகர் அருகே, 4.20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட, ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலக கட்டடம், 15 மாதங்களுக்கு மேலாக, திறப்பு விழாவுக்காக காத்திருக்கிறது.
திருப்பூர் மாவட்டத்தில், தொழிலாளர்துறை உதவி கமிஷனர் (அமலாக்கம்), உதவி கமிஷனர் (சமரசம்), உதவி கமிஷனர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகங்கள் தோற்றுவிக்கப்பட்டது.
பி.ன்., ரோடு, மேட்டுப்பாளையம் அருகே, வாடகை கட்டடத்தில் இவை இயங்கி வந்தன. புதிய கலெக்டர் அலுவலக கட்டடம் திறக்கப்பட்ட பின், உதவி கமிஷனர் அமலாக்கம் மற்றும் சமரசம் ஆகிய அலுவலகங்கள், கலெக்டர் அலுவலக வளாகத்துக்கு மாற்றப்பட்டது. சமூக பாதுகாப்பு பிரிவு மேட்டுப்பாளையம் பகுதியிலேயே, தொடர்ந்து இயங்கி வருகிறது.
தொழிலாளர் துறை நிதி ஒதுக்கீட்டில், அவிநாசி ரோடு, கலெக்டர் முகாம் அலுவலகம் எதிரே, ஒருங்கிணைந்த தொழிலாளர்துறை அலுவலகம் கட்ட இடம் ஒதுக்கப்பட்டது. 4.20 கோடி ரூபாய் மதிப்பில் தரைத்தளம் மற்றும் இரண்டு தளங்களுடன் அலுவலக வளாகம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர் துறை சார்ந்த அலுவலக பணிகள் மற்றும் சேவைகளை, ஒரே இடத்தில் பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. கட்டுமான பணி முடிந்து, 15 மாதங்களுக்கு மேலாக, திறப்பு விழாவுக்காக காத்திருக்கிறது.
இதுகுறித்து தொழிலாளர்துறை அலுவலர்களிடம் கேட்டபோது, 'தமிழக முதல்வர் விழாவின் வாயிலாக, கட்டட திறப்பு விழா நடத்தப்படும்.
கடந்த, ஆறு மாதங்களுக்கு முன்பாகவே, கட்டுமான பணி நிறைவு பெற்றுள்ளதாக அறிக்கை அளித்துள்ளோம். விரைவில், முதல்வர் பங்கேற்கும் விழா அல்லது, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக திறப்பு விழா நடத்தப்படும்,' என்றனர்.